இந்திய மக்களின் புறக்கணிப்பு மாலத்தீவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் முஹம்மது நஷீத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள முன்னாள் அதிபர் முஹம்மது நஷீத் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியவதாவது:-
இந்திய மக்களின் புறக்கணிப்பு மாலத்தீவை மிகவும் பாதித்துள்ளது, நான் தற்போது இந்தியாவில் இருக்கும்போது இது குறித்து மிகவும் கவலைப்படுகிறேன். மாலத்தீவு மக்களும் இதுகுறித்து வருந்துகிறார்கள் என்று நான் சொல்ல விரும்புகிறேன். இந்திய மக்கள் தங்கள் விடுமுறை நாட்களில் மாலத்தீவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்களுடைய விருந்தோம்பலில் எந்த மாற்றமும் இருக்காது.
மாலத்தீவு அதிபர், இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் நாட்டை விட்டுச் செல்ல வேண்டும் என்று கூறியபோது, இந்தியா என்ன செய்தது? அவர்கள் தங்கள் கைகளையும் தசைகளையும் முறுக்கவில்லை. மாறாக மாலத்தீவு அரசாங்கத்தை அதுகுறித்து விவாதிக்க சொன்னார்கள். அதுதான் ஒரு பொறுப்பான வல்லரசின் செயல். 1988ல், மாலத்தீவில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடந்தபோது, இந்தியா அதனை தடுத்து, எங்கள் அரசாங்கத்தை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்தது. கொரோனா வந்தபோதும் கூட, இந்தியா மூலம்தான் நாங்கள் தடுப்பூசியைப் பெற்றோம். இவ்வாறு முஹம்மது நஷீத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஜனவரியில் இரண்டு நாள் பயணமாக லட்சத்தீவு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது பயண அனுபவம் குறித்து எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதோடு, அங்கு எடுக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்களை பிரதமர் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், அதை விமர்சிக்கும் வகையில் சர்ச்சையான கருத்தை சமூக வலைதள பதிவு மூலமாக தெரிவித்திருந்தனர் மாலத்தீவு அமைச்சர்களான மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் ஆகியோர். இது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது. இதற்கு இந்திய அரசு தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. அங்கு ஆட்சியில் உள்ள முகமது முய்சு அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட சூழலில் சர்ச்சை கருத்து தெரிவித்த மூன்று அமைச்சர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் இருநாட்டு அரசுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.