தேர்தல் நெருங்கும் சூழலில், ஓபிஎஸ்ஸுக்கு எத்தனை சீட், என்னென்ன தொகுதிகளை பாஜக ஒதுக்கும் என்று தெரியவில்லை.. எனினும், பாஜகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார் ஓபிஎஸ்.
பாஜகவுடன் இணைந்து வரப்போகும் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். எனவே, பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என்று தொடர்ந்து கூறிவருகிறார். எனினும், பிரதமர் மோடி சமீபத்தில் தமிழகம் வருகைகளின்போது, கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தவில்லை.. கூட்டணி தொடர்பாகவும் யாருடனும் பேசவில்லை. 2 முறை பிரதமர் மோடி தமிழகம் வந்த நிலையில், ஓபிஎஸ் – தினகரன் கூட்டணி விவகாரம் தொடர்பாக ஏதாவது முடிவெடுக்கப்பட்டும் பிரதமரை சந்திக்க அழைப்பு எதுவும் வரவில்லை. இப்படிப்பட்ட சூழலில், தேர்தல் தொடர்பாக ஆதரவாளர்களுடன் தன்னுடைய ஆலோசனையை துவக்கியிருக்கிறார் ஓபிஎஸ்.. நேற்று நள்ளிரவிலும் இந்த ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.. அதாவது நேற்றிரவு 10.15 மணியளவில் தொடங்கிய ஆலோசனை நள்ளிரவு 12.30 மணி வரைக்கும் மேல் நடைபெற்றதாக சொல்கிறார்கள்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் அணி சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனு பெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 10 ஆயிரம் ரூபாயை செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் அளித்த நபர்களிடம் மாலை 6 மணி முதல் நேர்காணல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, பாஜகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழுவை அமைத்து ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழுவில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன்,ஜே.சி.டி பிரபாகர், தர்மர், கு.ப. கிருஷ்ணன், புகழேந்தி, மருது அழகுராஜ் ஆகியோர் இடம்பிடித்து உள்ளனர்.
பாஜகவுடன் எத்தனை தொகுதிகளை கேட்டுப் பெறப்போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், ஓபிஎஸ் அணியில் பிரதானமான அதிமுக நிர்வாகிகள் அதிகம் இல்லாதபட்சத்தில் குறைவான அளவே தொகுதிகளை ஒதுக்க பாஜக முடிவெடுக்கும் என்கிறார்கள். ஆனால், கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு சீட் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் இருவருமே ஆர்வமாகி உள்ளனர். அந்தவகையில், ஓபிஎஸ், தினகரன் இருவருக்கும் சேர்ந்து பாஜக 10 தொகுதிகளை ஒதுக்கி, அவைகளை சமமாக பிரித்து, தலா 5 தொகுதிகளில் இருவருமே போட்டியிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாம். அதுமட்டுமல்ல, எந்தெந்த தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பது குறித்து, ஓபிஎஸ் – தினகரன் தரப்பில் லிஸ்ட் தயார் செய்து பாஜக தரப்பில் தரப்பட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, அமமுக தரப்பில் போட்டியிட விரும்பும் தொகுதிகள், ராமநாதபுரம், திருநெல்வேலி, திருச்சி, தென்சென்னை, வேலூர், நீலகிரி, நாகப்பட்டிணம், விழுப்புரம், திண்டுக்கல், திருவள்ளூர் தொகுதிகள் கோரப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்பில், தேனி, ஸ்ரீபெரும்புதூர், திருச்சி, மதுரை, சிவகங்கை, தஞ்சை, வட சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோவை ஆகிய தொகுதிகள் கோரப்பட்டுள்ளது.
இப்படி ஆளுக்கு ஒருபக்கம் லிஸ்ட் தயார் செய்தாலும், ஓபிஎஸ் – தினகரன் இருவருமே தாமரை சின்னத்தில் நிற்க வேண்டும் என்று வலியுறுத்த வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.. ஆனால், இருவருமே தனி சின்னத்தில் நிற்க விரும்புவதாக தெரிவித்துள்ள நிலையில், இன்னும் அதற்கு மேலிடத்திலிருந்து பச்சை கொடி கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான், ஓபிஎஸ் தேர்தல் பேச்சுவார்த்தை குழுவை அறிவித்திருக்கிறார்.