புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கு தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையம் தாமாக முன்வந்து இன்று நேரில் விசாரணையை தொடங்கியுள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கருணாஸ், விவேகானந்தன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் முழு விசாரணை நடத்த ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சிறுமி கொலை தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. ன்று புதுச்சேரி வந்த தேசிய பட்டியலின ஆணையத்தின் சென்னை பிரிவு மண்டல இயக்குநர் ரவி வர்மன் தலைமையில் ஆலோசகர் ராமசாமி, புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை இயக்குநர் இளங்கோவன் அடங்கிய குழுவினர் சிறுமிக்கு பிரேத பரிசோதனை நடைபெற்ற ஜிப்மர் மருத்துவமனை, சம்பந்தப்பட்ட முத்தியால்பேட்டை காவல் நிலையம், சிறுமியின் இல்லம் ஆகிய இடங்களில் நேரில் விசாரணை மேற்கொண்டனர். ஜிப்மரில் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களுடன் பேசிய ஆணையத்தினர், முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் போலீஸாரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் சம்பவங்கள் குறித்து கேட்டறிந்ததோடு அந்தப் பகுதியில் விசாரணை செய்தனர்.
தேசிய பட்டியலின ஆணையத்தின் சென்னை பிரிவு மண்டல இயக்குநர் ரவி வர்மன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பாதிக்கப்பட்ட சிறுமி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்த உடனேயே இங்கு வந்தோம். காவல் துறை சரியான முறையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பிரேத பரிசோதனை, டிஎன்ஏ அறிக்கை உள்ளிட்டவை குறித்து ஜிப்மர் மருத்துவமனை சென்று விசாரித்தோம். அவர்களும் சரியான நடவடிக்கை எடுத்துள்ளனர். பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களும் சிறுமி கொலை சம்பவத்தில் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் பெண்கள் மத்தியில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கின் விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் தான் நடக்கும். குற்றவாளிகள் தப்பிக்காதவாறு காவல் துறை அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது.
கஞ்சா, போதைப் பொருட்கள் நடமாட்டம் இருந்தால் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் துறையிடம் கூறியுள்ளோம். மது பழக்கம், கஞ்சா பழக்கம் உள்ளவர்கள் குறித்து காவல் துறையிடம் பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க தாய்மார்கள் அறிவுறுத்துவதோடு, அவர்களை ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்க வேண்டும்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கிழ் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வரும் திங்கள்கிழமை ரூ.7 லட்சத்து 12 ஆயிரத்து 500 வழங்கப்படவுள்ளது. அடுத்ததாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு ரூ.4 லட்சம் வழங்கப்படும். பிரேத பரிசோதனையில் மருத்துவர்களுக்கு கிடைத்தது நாள்பட்ட மாதிரி. 24 மணி நேரத்தில் அந்த மாதிரி கிடைத்திருந்தால், சம்மந்தப்பட்டவர்கள் யார் என்று கண்டறிய எளிதாக இருக்கும்.
பெற்றோர்களின் ரத்தத்தை வைத்து பரிசோதனை செய்து வருகின்றனர். டிஎன்ஏ அறிக்கை இன்னும் அவர்கள் கொடுக்கவில்லை. அதற்கு முன்னதாகவே குற்றவாளிகள் நாங்கள் தான் செய்தோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். ஆகவே, அவர்கள் தான் கொலையாளிகள். மேலும், சம்பவம் நடைபெற்ற இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட தடயங்களை வைத்து தொடர் விசாரணை நடத்த கூறியுள்ளோம். அதனை செய்து வருகின்றனர்.
இது போன்ற நிகழ்வு எந்த பெண்ணுக்கும் நிகழக் கூடாது. தாங்கிக் கொள்ள முடியாத துயரமாக உள்ளது. இதுதான் கடைசியான நிகழ்வாக இருக்க வேண்டும். சிறுமி கொலை குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். தனிப்பட்ட முறையில் என்னுடைய இதயமும் கனத்துப்போயுள்ளது. சிறுமியின் பெற்றோர் எங்களிடம் எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை. நாங்கள் சட்டப்படி என்ன செய்ய முடியுமோ அதனை செய்ய உறுதுணையாக இருப்பதாக கூறியுள்ளோம். அவர்களுக்கு சட்டப்படி வேலை வாய்ப்பு, பென்ஷன் கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்துள்ளோம். அதனை அரசு மேற்கொள்ளும். காவல் துறை, அரசின் நடவடிக்கையில் எங்களுக்கு திருப்திகரமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.