பகுஜன் சமாஜ் கட்சி வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை பொறுத்த அளவில் உத்தரப் பிரதேசம் முக்கியமான மாநிலமாகும். ஏனெனில், உத்தரப் பிரதேசத்தில்தான் அதிக அளவிலான தொகுதிகள் இருக்கின்றன. இதனால், அம்மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் முழு கவனம் செலுத்தி வருகின்றன. பாஜவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இண்டியா கூட்டணியை அமைத்துள்ளது. அதில், மற்றொரு முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி இணைந்திருக்கிறது. அதோடு, பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்தால் இண்டியா கூட்டணிக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-
பகுஜன் சமாஜ் கட்சி வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும். பிற கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி அமைக்கப் போவதாகவும், மூன்றாவது அணி அமைக்கப் போவதாகவும் வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்திதான். உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டியிடுவதால், எதிர்க்கட்சிகள் கலக்கமடைந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் அவர்கள் தினம்தோறும் விதவிதமான வதந்திகளைப் பரப்பி மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். மக்களும் கவனமாக இருக்க வேண்டும். பகுஜன் சமூகத்தின் நலன் கருதி, இக்கட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் என்பது உறுதி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.