மதுரைக்கு எய்ம்ஸும் வரல.. சின்னப்பிள்ளைக்கு வீடும் தரல: உதயநிதி ஸ்டாலின்!

மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல, மதுரை சின்னப்பிள்ளைக்கு மத்திய அரசின் வீடும் வரவில்லை என விமர்சித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் ஸ்த்ரிசக்தி புரஸ்கார் விருது மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சின்னப்பிள்ளை. பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் உறுதி அளித்தபடி தனக்கு வீடு வழங்கவில்லை என கண்ணீருடன் பேசி இருந்தார் மதுரை சின்னப்பிள்ளை. இதை அறிந்ததும் சின்னப்பிள்ளைக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

முதல்வரின் உத்தரவை தொடர்ந்து சின்னப்பிள்ளைக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான அரசாணை மற்றும் கூடுதல் நிலத்திற்கான பட்டா இன்றே வழங்கப்பட்டது. சின்னப்பிள்ளையை நேரில் சந்தித்த மதுரை கிழக்கு வட்டாட்சியர் பழனிகுமார், கூடுதல் நிலத்திற்கான பட்டா மற்றும் அரசாணையை அவரிடம் வழங்கினார்.

இதையடுத்து மகிழ்ச்சியுடன் பேட்டி அளித்துள்ள சின்னப்பிள்ளை, 4 ஆண்டுகளாக வீடு கேட்டு போராடி வருவதாகவும், ஆனால் இன்றுதான் தனக்கு தீர்வு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு வீடு கட்டிக்கொடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

இந்திய ஒன்றியத்திலேயே முதன் முறையாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொடங்கிய மகளிர் சுய உதவிக்குழுவில் இணைந்து, கிராமப்புற மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்த மதுரை சின்னப்பிள்ளை அவர்களுக்கு, வீடு வழங்கப்படும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு தரப்பில் வாக்குறுதி தரப்பட்டது.

மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல, சின்னப்பிள்ளைக்கு ஒன்றிய அரசின் வீடும் வரவில்லை. 2 ஆண்டு கால காத்திருப்புக்குப் பின், இதுகுறித்த வேதனையை சின்னப்பிள்ளை வெளிப்படுத்தியிருந்தார். இதையறிந்த நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள், சின்னப்பிள்ளை அவர்களுக்கு தமிழ் நாடு அரசு சார்பில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிய வீடும், 380 சதுர அடி நிலத்திற்கான பட்டாவும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.

‘மகளிர் மேம்பாடு’ எனும் கலைஞர் அவர்களின் கனவை நனவாக்க உழைத்த சின்னப்பிள்ளைக்கு, ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு கிடைக்கவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அவருக்கு என் அன்பும், வாழ்த்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.