ஒரே நேரத்தில் பல்வேறு இலக்குகளை தனித்தனியாக தாக்கும் திறன் வாய்ந்த அதிநவீன அக்னி 5 ஏவுகணையின் முதல் சோதனை வெற்றி பெற்றுள்ளது. இதற்காக டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(டிஆர்டிஓ) 10 ஆண்டு முயற்சிக்குப் பிறகு மேம்படுத்தப்பட்ட அக்னி – 5 ஏவுகணையை தயாரித்துள்ளது. திவ்யாஸ்திரம் என்ற திட்டத்தின் கீழ், மல்டிபில் இண்டிபென்டன்ட்லி டார்கெட்டபிள்ரீ-என்ட்ரி வெஹிகிள் (எம்ஐஆர்வி) தொழில்நுட்பத்தில் உள்நாட்டிலேயே இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை முதல் முறையாக நேற்று பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றதாக டிஆர்டிஓ அறிவித்துள்ளது.
இந்த சோதனையின் மூலம், எம்ஐஆர்வி தொழில்நுட்ப ஏவுகணைகள் கொண்ட அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. இந்த திட்டத்தின் இயக்குநர் ஒரு பெண் ஆவார். அத்துடன் இதில் பெண்கள் கணிசமான அளவில் பங்களித்துள்ளனர்.
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் இந்த ஏவுகணை விண்வெளியில் (வளி மண்டலத்துக்குமேல்) செலுத்தப்படும். இது பின்னர் அங்கிருந்து மீண்டும் வளி மண்டலத்துக்குள் நுழைந்து வந்து தரையில் உள்ள பல்வேறு இலக்குகள் மீது தனித்தனியாகவும் துல்லியமாகவும் தாக்குதல் நடத்தும். இது 5 ஆயிரம் கி.மீ.க்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் வாய்ந்தது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “திவ்யாஸ்திரம் திட்டத்தின் கீழ் எம்ஐஆர்வி தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள அக்னி – 5 ஏவுகணை முதல் சோதனை வெற்றி பெற்றதற்கு நமது டிஆர்டிஓ விஞ்ஞானிகளை நினைத்து பெருமைப்படுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தள பக்கத்தில், “நம் நாட்டுக்கு இது மிகமுக்கியமான நாள். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி 5ஏவுகணையின் முதல் சோதனையை வெற்றிகரமாக நடத்தியதற்காக விஞ்ஞானிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பாதுகாப்பு துறையில் தற்சார்பு அடைய வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டத்துக்கு இது ஊக்கமளிப்பதாக உள்ளது” என பதிவிட்டுள்ளார்.