தேர்தல் பத்திர விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும்: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!

எஸ்பிஐ வங்கி அளித்துள்ள தேர்தல் பத்திர விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார் இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார். அப்போது அவர் பேசுகையில், “ஜம்மு காஷ்மீர் மட்டுமல்ல, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அமைதியான முறையில், அதிகபட்ச பங்கேற்புடன் தேர்தல்களை நடத்துவதற்கு தயாராகவுள்ளோம். இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தலுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தயாராகிவிட்டது. ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும். எப்போது தேர்தல் நடத்துவது என்பது குறித்த முடிவு எடுக்கப்பட்டவுடன் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

அப்போது தேர்தல் பத்திரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஜீவ் குமார், “இந்திய தேர்தல் ஆணையம் எப்போதும் வெளிப்படைத் தன்மைக்கு ஆதரவாக உள்ளது. எஸ்பிஐ அளித்துள்ள தேர்தல் பத்திர விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும். தேர்தல் பத்திரங்களை பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களுக்கு வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்துகிறது” என்று குறிப்பிட்டார்.

கடந்த 2017-18ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் 2018-ல் நடைமுறைக்கு வந்தது. இதனை குறிப்பிட்ட சில வங்கிக் கிளைகளில் மட்டுமே எஸ்பிஐ விற்பனை செய்து வந்தது. ரூ.1,000 முதல் ரூ.1 கோடி வரையில் இந்த பத்திரங்கள் பல்வேறு மதிப்புகளில் விற்பனை செய்யப்பட்டன. அந்த வகையில் 6 ஆண்டு காலம் விற்பனை செய்த தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரத்தை சுமார் 30 பிரிவுகளாக தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வழங்கியுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.16,518 கோடி எனத் தெரிகிறது. எஸ்பிஐ சமர்ப்பித்த விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 15-ம் தேதிக்குள் அதன் இணையத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததும் இங்கே நினைவுகூரத்தக்கது.