அஜித் பவார் அணியை தேசியவாத காங்கிரஸாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், சரத் பவார் புகைப்படத்தை வைத்து பிரச்சாரம் செய்ய அஜித் பவார் அணிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.
தேசியவாத காங்கிரஸிலிருந்து தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் மகாராஷ்டிராவின் ஷிண்டே-பாஜக தலைமையிலான அணிக்கு அஜித் பவார் ஆதரவளித்தார். இதனையடுத்து கட்சி இரண்டாக பிரிந்தது. அஜித் பவார் துணை முதலமைச்சராக ஆக்கப்பட்டார். அதேபோல அவருடன் சென்ற எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டது. இருப்பினும், தேசியவாத காங்கிரசுக்கு யார் சொந்தக்காரர்? என்று கேள்வி எழுந்தது. இதற்கிடையில் அஜித் பவாரின் அணியை தேசியவாத காங்கிரசாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இந்த அணிக்கு, தேசியவாத காங்கிரஸின் கடிகாரம் சின்னமும் ஒதுக்கப்பட்டது.
இப்படி இருக்கையில், தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சரத் பவார் அணி உச்சநீதிமன்றத்தை அணுகியது. இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் சூர்ய காந்த் , கே.வி.விஸ்வநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சரத்பவார் குழுவின் சார்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, தேசியவாத காங்கிரஸின் கடிகாரம் சின்னம் மற்றம் சரத் பவாரின் படத்தை அஜித் பவார் அணியினர் பயன்படுத்துவதாக ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனையடுத்து, சரத் பவார் புகைப்படத்தை வைத்து பிரச்சாரம் செய்ய அஜித் பவார் அணிக்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.
அப்போது குறிக்கிட்ட அஜித் பவார் குழுவின் சார்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் மனிந்தர் சிங், “கட்சி இதை வேண்டுமென்றே செய்யவில்லை. உறுப்பினர்கள் யாரேனும் செய்திருப்பார்கள். எல்லா சோஷியல் மீடியா போஸ்ட்களையும் கட்சி எப்படி கட்டுப்படுத்த முடியும்?” என்று கேள்வி எழுப்பினார். இதை கேட்டு கோபமடைந்த நீதிபதிகள், கட்சி தங்கள் தொண்டர்களை கட்டாயம் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கறாராக கூறியது. மேலும், “நீங்கள்தான் பிரிந்து வந்துவிட்டீர்களே, அப்புறம் என்ன? உங்கள் சொந்த அடையாளங்களை கொண்டு தேர்தல்களை எதிர்கொள்ளுங்கள்” என்று நீதிபதிகள் கூறினர். அதேபோல ஏற்கெனவே சரத் பவாரிடம் உள்ள கடிகார சின்னத்தை ஏன் பயன்படுத்துகிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சரத் பவார் பெயர், படத்தை பிரச்சாரத்துக்கு பயன்படுத்த மாட்டோம் என திங்கள்கிழமைக்குள் உறுதிமொழி தரவும் உத்தரவிட்டனர். மேலும் கடிகார சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னத்தை பயன்படுத்தவும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.