முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பிக்கள் இன்று திமுகவில் இணைந்துள்ளனர்!

முன்னாள் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி உட்பட அதிமுக, அமமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் இன்று திமுகவில் இணைந்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவற்றை வெளியிட்டு வருகின்றன. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதியை நாளை பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர். திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக, 21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது திமுக. எந்தக் கட்சிக்கு எந்தத் தொகுதி என்பதும் சில கட்சிகளுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் முழுமையாக அறிவிக்கப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து, 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் நேர்காணலை நடத்தி முடித்து ரெடியாக உள்ளது திமுக. தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே வேட்பாளர்களை அறிவித்து களத்தில் இறங்க தயாராக உள்ளது திமுக.

தேர்தல் பரபரப்புக்கு மத்தியில், பல்வேறு அரசியல் கட்சிகளும் மாற்று கட்சிகளில் இருந்து நிர்வாகிகளை தங்கள் கட்சிகளில் இணைத்து வருகின்றனர். இந்த நிலையில், கடலூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த அதிமுக மற்றும் அமமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 500 பேர் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தனர். பாமக சார்பில் கடந்த 1999ல் தருமபுரி தொகுதி எம்.பியாக இருந்தவர் பு.த.இளங்கோவன். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த இவர் பாமகவில் இருந்து விலகி கடந்த 2014ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் தருமபுரியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதிமுகவில் அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார் இளங்கோவன். இந்நிலையில் இன்று அவர் திமுகவில் இணைந்துள்ளார்.

விருத்தாசலம் தொகுதியில் 2016ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏவாக இருந்தவர் விடி கலைச்செல்வன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரனுடன் இணைந்தார். பின்னர் மீண்டும் எடப்பாடி பக்கம் தாவினார். இந்நிலையில், அவர் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் கடலூர் மேற்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த விருத்தாசலம் நகர முன்னாள் செயலாளர் விடி.கலைச்செல்வன், Ex.M.L.A., பு.தா.இளங்கோவன், Ex.M.P., ஆகியோர் தலைமையில் அதிமுக., அமமுக நிர்வாகிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்” என கூறப்பட்டுள்ளது.