சி.ஏ.ஏ. என்பது குடியுரிமை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டது: மத்திய அரசு

சி.ஏ.ஏ. என்பது குடியுரிமை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டதே தவிர, குடியுரிமையை பறிப்பதற்காக அல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா (சி.ஏ.ஏ.) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. இருப்பினும் அந்த சட்ட மசோதா அமல்படுத்தப்படாமல் இருந்து வந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கு முன்பாக சி.ஏ.ஏ. அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.

இந்த நிலையில், சி.ஏ.ஏ.வை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் கடந்த 11-ந்தேதி வெளியிடப்பட்டன. இத்துடன் இச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இதன்படி பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத அடக்குமுறைக்கு உள்ளாகி, அங்கிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்ட மசோதா வழிவகை செய்கிறது.

இதனிடையே இந்த சட்ட மசோதாவிற்கு எதிராக பல்வேறு எதிர்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் சி.ஏ.ஏ. குறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லார் கூறுகையில், “சி.ஏ.ஏ. விவகாரம் எங்களுக்கு கவலையளிக்கிறது. அது எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், சி.ஏ.ஏ. குறித்து அமெரிக்க அரசு தவறாக புரிந்து கொண்டுள்ளதாகவும், அமெரிக்காவின் கருத்து தேவையற்றது என்றும் இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

சி.ஏ.ஏ. என்பது குடியுரிமை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டதே தவிர, குடியுரிமையை பறிப்பதற்காக அல்ல. மனித உரிமை, கன்னியம் ஆகியவற்றை இந்த சட்டம் பாதுகாக்கிறது. அமெரிக்காவின் கருத்தை பொறுத்தவரை, இந்த சட்டத்தை அவர்கள் தவறாக புரிந்து கொண்டு, தேவையற்ற கருத்து தெரிவித்திருப்பதாக கருதுகிறோம். இந்தியாவின் பன்முகத் தன்மை கொண்ட கலாச்சாரம் மற்றும் பிரிவினைக்கு முந்தைய வரலாறு குறித்து தெரியாதவர்கள் எங்களுக்கு பாடம் எடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.