தேர்தல் பத்திரம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மிரட்டி பணம் பறிக்கும் மோசடி: ராகுல்

தேர்தல் பத்திரங்கள் மிகப்பெரிய ஊழல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மிரட்டி பணம் பறிக்கும் மோசடி என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பாரத் ஜடோ யாத்திரையின்போது செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அரசியல் கட்சிகளை உடைக்க பாஜகவுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. இதற்காக அவர்கள் எந்த விசாரணை அமைப்புகளையும் பயன்படுத்தவில்லை. ஆனால் பணத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த பணம் தேர்தல் பத்திரம் வடிவில்தான் வந்திருக்கிறது. மிலிந்த் தியோரா மற்றும் அசோக் சவான் போன்ற சிலர் காங்கிரஸை விட்டு வெளியேறியுள்ளனர். இருப்பினும் நாங்கள் மனம் தளரவில்லை. ஒன்றாக இணைந்து நின்று தேர்தலை எதிர்கொள்வோம். கார்ப்ரேட் இந்தியாவிடமிருந்து மிரட்டி பணம் பறிக்கப்படுகிறது. ஆனால், இது பிரதமரால் நடத்தப்படுகிறது என்பது தற்போது வெளிப்படையாக தெரிய வந்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.