இஸ்லாமிய மக்களின் நலன்களை பேணுவதில் தி.மு.க அரசு என்றும் உறுதியுடன் செயல்படும்: உதயநிதி

இஸ்லாமிய மக்களின் நலன்களை பேணுவதில் தி.மு.க அரசு என்றும் உறுதியுடன் செயல்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சென்னை தமிழ்நாடு வக்பு வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இப்தார் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், வக்பு வாரிய உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு வக்பு வாரியத்தில் நடைபெற்ற ரமலான் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோம். பிறருக்கு உதவுகின்ற ஈகை குணத்தை ரமலான் வலியுறுத்துவது போல, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு ‘எல்லோருக்கும் எல்லாம்’ என மக்கள் நல திட்டங்களைத் தருகிறது என்று உரையாற்றினோம். இஸ்லாமிய மக்களின் நலன்களை பேணுவதில் தி.மு.க அரசு என்றும் உறுதியுடன் செயல்படும்” என்று தெரிவித்து உள்ளார்.