கூட்டணி குறித்து தேமுதிக அறிவிக்கும் வரை எதையும் நம்பாதீர்கள்: பிரேமலதா!

லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக ஊடகங்களில் வெளி வரும் தகவல்கள் அனைத்தும் யூகத்தின் அடிப்படையிலானவை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசியல் களத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் என அனல் பறக்கிறது. திமுகவில் ஓராளவு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து விட்டது. பாஜக தனி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அதிமுக தனி கூட்டணி அமைத்து களம் காண்கிறது. இந்த இரண்டு கட்சிகளுமே தங்களுடன் தேமுதிக, பாமக வர வேண்டும் என்று விரும்புகின்றன. இதனால் இந்த கட்சிகளுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது. யாருடன் கூட்டணி என்று இரண்டு கட்சிகளுமே உறுதியாக இதுவரை அறிவிக்கவில்லை.

தேமுதிக அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை இரண்டு கட்டங்களாக நடைபெற்றுள்ளது. தேமுதிக சார்பில் 4 லோக்சபா தொகுதி மற்றும் 1 ராஜ்யசபா பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் வடசென்னை, கள்ளக்குறிச்சி உட்பட 4 லோக்சபா தொகுதிகளை மட்டும் வழங்க அதிமுக தயாராக உள்ளதாக தகவல் வெளியானது. அதேநேரம், வடசென்னை தொகுதிக்குப் பதிலாக வேறு தொகுதியை வழங்க வேண்டும் என தேமுதிக வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. 2 கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படாத நிலையில் இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தகவல் வெளியானது. அதிமுக – தேமுதிக கூட்டணி இன்று உறுதி செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த சூழ்நிலையில் ஊடகங்களில் வெளியாகும் யூகங்களை நம்ப வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் பிரேமலதா விஜயகாந்த். இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஊடகங்களில் வரும் செய்திகள் யூகங்களின் அடிப்படையில் வெளிவருகிறது. தலைமை கழகம் அறிவிக்கும் அறிவிப்பே இறுதியானது என்று குறிப்பிட்டுள்ளார்.