அருணாசல பிரதேசம், சிக்கிமில் வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்!

அருணாசல பிரதேசம், சிக்கிமில் 2 நாட்கள் முன்பே அதாவது ஜூன் 2 ஆம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் இன்று திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்காக நடைபெறுகிறது. லோக்சபா தேர்தலுடன் அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிஷா, ஆந்திர பிரதேச மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. லோக்சபா மற்றும் 4 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிமில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 2 ஆம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அருணாசல பிரதேசம், சிக்கிமில் 2 நாட்கள் முன்பே அதாவது ஜூன் 2 ஆம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் இன்று திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிமில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கும் சட்டபேரவைக்கும் சேர்த்து ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இரு மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் ஜூன் 2 ஆம் தேதி முடிவடைகிறது. எனவே, தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் தேதி ஜூன் 4 ஆம் தேதியில் இருந்து 2 ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் முன்பு அறிவித்தது போலவே 4 ஆம் தேதியே எண்ணப்படும் எனவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.