அதிமுக சின்னம், கொடி, லெட்டர்பேடை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்

அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தாக்கல் செய்திருந்த மனுவில், ‘அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தற்போது அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லை. அவருக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் தன்னை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறிக்கொண்டு அறிக்கைகளை வெளியிட்டும், புதிது, புதிதாக நிர்வாகிகளை நியமித்தும் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். எனவே அவர் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்புக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் பதிலளிக்கவில்லை எனக்கூறி அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்தக்கூடாது என இடைக்காலத் தடை விதித்து கடந்த அக்டோபரில் உத்தரவிட்டிருந்தார். அதன்பிறகு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் வரை அவற்றை பயன்படுத்த மாட்டேன் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் நீதிபதி என். சதீஷ்குமார் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘அதிமுகவின் பெயர்,கொடி, சின்னம், லெட்டர்பேடுபோன்றவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர் பயன்படுத்தக் கூடாது’’ என உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கெனவே தனக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு மற்றொரு மனுவையும் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2021-ம் ஆண்டு டிச.6-ம் தேதி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி ஆகியோர் தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட்டனர். இந்த பதவி 2026-ம் ஆண்டு டிச.5-ம் தேதி வரை, 5 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது. உட்கட்சி தேர்தலும் கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட்டு, அதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதே ஆண்டு ஜூன் மாதம் பழனிசாமி தரப்பினர், பொதுக்குழுவை கூட்டி, கட்சி விதிகளுக்கு மாறாக தீர்மானங்கள் நிறைவேற்றி, கட்சியின் பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு எதிரான பல சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எனவே, 2024 மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதற்கு, ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்திடும் வகையில், தேர்தல் ஆணைய தரவுகளின்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்தான் என்பதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். மக்களவை தேர்தல் அவசரத்தை கருத்தில்கொண்டு இந்த புதிய மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இக்கோரிக்கையை தேர்தல் ஆணையத்தால் பரிசீலிக்க முடியாத பட்சத்தில், இடைக்கால நிவாரணமாக தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படும் தனித்தனி சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும். நான் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை இயக்கி வரும் நிலையில், அதிமுக (ஓபிஎஸ்) என்ற பெயரில் போட்டியிடவும் அனுமதிக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.