அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி!

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி, எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதிகளை ஒதுக்கீடு செய்து பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டது. அதற்கான ஒப்பந்தத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் கையெழுத்திட்டனர். அதன் தொடர்ச்சியாக, எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியை பழனிசாமி ஒதுக்கீடு செய்தார். அதற்கான ஒப்பந்தத்தில் எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட்டனர். அதனைத் தொடர்ந்து தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் வழங்க இருப்பதாகவும், எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதன் மூலம் அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்துள்ளது.

பின்னர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், புதிய தமிழகம் கட்சி இரும்பு மனிதர் பழனிசாமி தலைமையில் கூட்டணி அமைத்துள்ளது. 2019 மக்களவை தேர்தலிலும் அதிமுக கூட்டணியில்தான் புதிய தமிழகம் கட்சி இருந்தது. சுயமரியாதை கொண்ட பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி அங்கம் பெற்றிருக்கிறது. தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம். தென்காசி தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து கட்சி நிர்வாகிகள் கலந்தாலோசித்து முடிவெடுப்பார்கள் என்றார்.