இவ்வளவு மோசமான ஆளுநரால் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ?: அமைச்சர் ரகுபதி!

தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ள நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநர் ரவியை விமர்சித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் உயர் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. இதன் காரணமாக மீண்டும் எம்.எல்.ஏ பதவியைப் பெற்றார் பொன்முடி. பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவிக்கு பரிந்துரை செய்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். ஆனால் பொன்முடி பதவி ஏற்பதாக இருந்த 14 ஆம் தேதி ஆளுநர் திடீரென டெல்லி புறப்பட்டார். இதனால் பதவியேற்பு காலதாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 17 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில், “பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. அவரை குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பை வழங்கியிருக்கலாம்” எனத் தெரிவித்திருந்தார்.

பொன்முடிக்கு அமைச்சராக மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுத்ததால், அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அரசியல் சாசனத்தில் 164(1) பிரிவை ஆளுநர் ஆர்.என்.ரவி அப்பட்டமாக மீறுகிறார். தமிழ்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் ஆர்.என். ரவி முயற்சிக்கிறார். எனவே, பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு கோரியது. ஆளுநருக்கு எதிரான இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. ‘பொன்முடியை அமைச்சராக்க முடியாது என ஆளுநர் கூறுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. 10 மசோதாக்களை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழக அரசு வாதங்களாக வைத்தது.

அதனைத் தொடர்ந்து, “தான் என்ன செய்கிறோம் என்று ஆளுநருக்கு தெரிகிறதா இல்லையா?” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக தெரிவித்ததோடு, தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகும் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? இது நீதிமன்ற அவமதிப்பு. உச்சநீதிமன்றத்துடன் ஆளுநர் விளையாட வேண்டாம். ஆளுநருக்கு பதவியேற்பை நிறுத்தி வைக்க அதிகாரம் இல்லை. ஆளுநர் மறுத்தால் நீதிமன்றம் உத்தரவிட நேரிடும்” என காட்டமாக தெரிவித்தார். மேலும், சுப்ரீம் கோர்ட் உத்தரவை அவமதிக்கும் ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு கண்டிப்புடன் தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

“உங்கள் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்” என்று மத்திய அரசு தரப்பு வழக்கறிஞரிடமும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் இந்த விவகாரத்தில் நாளைக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கெடு விதித்துள்ளது உச்சநீதிமன்றம். இந்த விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் ஆளுநரின் செயல்பாட்டை சரமாரியாக விமர்சித்த நிலையில், மத்திய அரசு சார்பாக ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை நாங்கள் நியாயப்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பொன்முடி தொடர்புடைய வழக்கில் தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது குறித்துப் பேசியுள்ளார் ரகுபதி. அமைச்சர் ரகுபதி கூறுகையில், “சட்டமன்ற உறுப்பினர்கள் எவரும் அமைச்சர் ஆகலாம். அமைச்சர் ஆவதற்கென்று தனி தகுதி எதுவும் தேவையில்லை. அமைச்சர் ஆக முடியாது என்ற தகுதி இழப்பு விதி எதுவும் இல்லை. சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டாலே அவர் அமைச்சராவதற்கு முழு தகுதி பெற்றுவிட்டார். அந்த அடிப்படையில் தான் தமிழக முதல்வர் ஸ்டாலின், பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநரிடம் பரிந்துரை செய்தார். ஆனால், நம் ஆளுநர் தான் உலக மேதாவி ஆயிற்றே? சட்ட வல்லுநர்களை கேட்கிறேன் எனக் கூறினார். கடைசியாக உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு குட்டு வைத்துள்ளது. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரே ஆளுநரின் செயல்பாடுகளை நியாயப்படுத்தவில்லை, அவரது செயல்பாடுகள் கவலை அளிக்கிறது என ஒப்புக்கொள்கிறார். இவ்வளவு மோசமான ஆளுநரால் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ? மக்கள் இதையெல்லாம் நிச்சயமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என ரகுபதி தெரிவித்துள்ளார்.