டெல்லி முதல்வராக கெஜ்ரிவால் தொடர்வார்: ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு

மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், டெல்லி முதல்வராக அவரே தொடர்வார் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து ஆம் ஆத்மியின் அதிஷி கூறுகையில், “நாங்கள் முன்பு சொன்னது போல டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்வார் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம். இதை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம். அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. அவர் சிறையில் இருந்தபடி முதல்வராக செயல்படுவார். அவர் தனது பணியை தொடர்வதை தடுக்க எந்த சட்டமும் இல்லை. அவர் குற்றவாளி அல்ல” என அவர் தெரிவித்தார்.

சிறையில் இருந்தபடி முதல்வராக கெஜ்ரிவால் பணியாற்றும் பட்சத்தில் அது அரசியல் ரீதியாக நெருக்கடிகளை உருவாக்கும் என சொல்லப்படுகிறது. இதற்கு முன்னர் பிகார் மாநில முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட போது தனது பொறுப்பை அவரது மனைவி ராப்ரி தேவி வசம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரியில் நில மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் முதல்வர் பொறுப்பில் இருந்து விலகி இருந்தார்.

முன்னதாக, டெல்லி அரசின் மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கு தொடர்பாக அம்மாநிலத்தின் 2 அமைச்சர்களை அமலாக்கத் துறை கைது செய்தது. இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த வேண்டும் என அமலாக்கத் துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறி முதல்வர் கேஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக மறுத்து வந்தார். இந்த வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதா, கடந்த 15-ம் தேதி அமலாக்கத் துறையால் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார். இந்த சூழலில் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக அமலாக்கத்துறையினர் நடவடிக்கைக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று இரவு விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிறப்பு விசாரணை குழு எதையும் உச்சநீதிமன்றம் அமைக்கவில்லை. இந்நிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவருமான அதிஷி நம்பிக்கை தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தை பாதுகாக்கும் என்று கூறியுள்ள அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினரால், கெஜ்ரிவாலுக்கு எதிராக ஒரு ரூபாயை கூட கைப்பற்ற முடியவில்லை என்று விமர்சித்துள்ளார்.

கடந்த 2 மாதங்களில் 2வது முதலமைச்சரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.