ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் சுயேச்சை சின்னத்தில் போட்டி!

பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என தேர்தலில் நான்கு முனை போட்டி தற்போது நிலவி வருகிறது.

பாஜக கூட்டணியில் அதிகபட்சமாக பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமாகவுக்கு 3 தொகுதிகளும், தினகரனின் அமமுகவுக்கு இரண்டு தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, தேவநாதன் கட்சி, ஜான்பாண்டியன் கட்சிக்கு தலா ஓர் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாஜக 20 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடப்போவதாக அறிவித்து தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுவிட்டதாக அண்ணாமலை தெரிவித்தார். ஓபிஎஸ் தரப்புக்கு தொகுதிகள் எதுவும் ஒதுக்கீடு செய்யப்படமால் தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றதாக அறிவித்தது கேள்விகளை எழுப்பியது. இதுகுறித்து ஓபிஎஸ்ஸே அறிவிப்பார் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் ஓபிஎஸ் தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அதிமுக தொண்டர்கள் உரிமைமீட்புக்குழுவாக இருக்கும் நாங்கள்,தொண்டர்கள் பலத்தோடு பிரதமர் மோடி 3-வது முறையாக வெற்றி பெற்று பிரதமராக பொறுப்பேற்க ஆதரவு தருவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தோம். இரட்டை இலை சின்னத்தை பெறுவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம். பல்வேறு நிலைகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் மக்களவை தேர்தலும் வந்துவிட்டது. இதில் போட்டியிட்டு தொண்டர்களின் பலத்தை அறிவதற்கு 15-க்கும் மேற்பட்ட தொகுதிகள் கேட்டிருந்தோம். தொண்டர்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்று விரும்பினர். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், சின்னத்தை பெறுவதில் காலதமாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் தொண்டர்களின் பலத்தை நிரூபிப்பதற்காக ஒரு தொகுதியில் போட்டியிடுவது என தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுத்திருக்கிறோம். அதன்படி ராமநாதபுரம் தொகுதியில் நானே போட்டியிடுகிறேன். சுயேச்சை சின்னத்தில் தான் போட்டியிட இருக்கிறேன்.

தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகள், 39 மக்களவை தொகுதிகள் என எதில் நாங்கள் போட்டியிட்டாலும் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கும். தொண்டர்களின் உரிமையை காக்கும் பொறுப்பு தான் எங்கள் முக்கிய கடமை. இந்த தேர்தலில் எங்கள் பலத்தை நிரூபிக்கும்போது, தொண்டர்கள் பக்கம் அதிமுக தாமாக வந்து சேரும். புகழேந்தி, மருது அழகுராஜ் உள்ளிட்ட யாருடனும் கருத்து வேறுபாடு இல்லை. பாஜக கூட்டணியில் உரிய அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, ‘‘உயர் நீதிமன்ற உத்தரவின்படி இரட்டை இலை சின்னத்தை பன்னீர்செல்வம் தரப்புக்கு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த சின்னத்தை முடக்க வேண்டும். இரட்டை இலை சின்னத்தை பழனிசாமி தரப்பினர் பயன்படுத்தி படுதோல்வி அடைவதை தொண்டர்கள் விரும்பவில்லை’’ எனவும் குறிப்பிட்டு ஓபிஎஸ் ஆதரவாளர் வா.புகழேந்தி, தேர்தல் ஆணையத்தில் ஏற்கெனவே மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் அவர் புதிதாக அளித்துள்ள மனுவில், ‘‘டெல்லி உயர் நீதிமன்றத்தில் மட்டுமே தேர்தல் ஆணையத்தை எதிர்த்து நான் வழக்கு தொடர்ந்திருக்கிறேன். ஆகவே, வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்கு களையோ, தடையாணை விதிக்கப்பட்டுள்ள வழக்கையோ தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளக்கூடாது. டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, நான் ஏற்கெனவே அளித்துள்ள மனுவை மட்டும் பரிசீலனை செய்து, உரிய முடிவெடுக்க வேண்டும். இதுபற்றி என்னை நேரடியாக அழைத்து கருத்து கேட்டறிய வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.