கெஜ்ரிவால் கைது, ஆளும் கட்சியின் பயத்தை வெளிப்படுத்தியுள்ளது: மெகபூபா முப்தி

கெஜ்ரிவால் கைது; ஆளும் கட்சியின் பயத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஒன்றுபட்ட புரட்சியை எதிர்கொள்ளும் போது கொடுங்கோன்மை ஒருபோதும் வெற்றிபெறாது என மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார். இதற்கிடையில் 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், நேற்று கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவாலை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து கெஜ்ரிவால், இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

அரசியல் பழிவாங்கல் மற்றும் வளர்ந்து வரும் எதேச்சாதிகாரம் காரணமாக அமலாக்கத்துறையால் மற்றொரு முதல்-மந்திரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கோழைத்தனமான செயல், தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பே ஆளும் கட்சியின் பயத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஒன்றுபட்ட புரட்சியை எதிர்கொள்ளும் போது கொடுங்கோன்மை ஒருபோதும் வெற்றிபெறாது என்பதை வரலாறு காட்டுகிறது. நாங்கள் பயப்பட மாட்டோம். இவ்வாறு மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.