டெல்லி மதுபான ஊழல் முறைகேடு வழக்கில் கடந்த 15-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட தெலங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் மகளும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் எம்எல்சியுமான கே. கவிதாவின் காவல் வரும் மார்ச் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் அமைச்சர் மணிஷ் சிசோதியா ஆகியோருடன் இணைந்து கவிதா சதிச் செயலில் ஈடுபட்டுள்ளார். மதுபான கொள்கைக்காக ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ. 100 கோடி பணம் கொடுத்துள்ளார் என அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் அவர் கடந்த 15 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை காவலில் எடுத்த அமலாக்கத் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவருடைய காவல் முடிந்த நிலையில் அதனை நீட்டிக்கக் கோரி அமலாகத் துறையினர் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்ற சிறப்பு நீதிபதி, கவிதாவை மேலும் 3 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு கவிதா அளித்தப் பேட்டியில், “இது சட்டவிரோதமான வழக்கு. இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட வழக்கு. ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு. நாங்கள் இதை நீதிமன்றத்தில் சட்டபூர்வமாக எதிர்கொள்வோம். என்னைக் காவலில் எடுத்துள்ள அமலாக்கத் துறையினர் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியைத் தான்கேட்டுக் கொண்டிருக்கின்றனர். தேர்தல் நேரத்தில் எதற்காக இத்தனை அரசியல் ரீதியிலான கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன எனப் புரியவில்லை. இவற்றில் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும் எனக் கோருகிறேன்” என்றார்.