கெஜ்ரிவால் விவகாரத்தில் ராகுல் இரட்டை வேடம்: ஸ்மிருதி இராணி!

“அரவிந்த் கெஜ்ரிவால் குடும்பத்தினருக்கு இன்று ஆதரவு தெரிவிக்கும் வயநாடு எம்.பி. ராகுல் காந்தி, தெலங்கானா தேர்தலின்போது அரவிந்த் கெஜ்ரிவாலை ஊழல்வாதி என்றார். கெஜ்ரிவால் விவகாரத்தில் ராகுல் காந்தியின் இரட்டை வேடம் வெளிப்பட்டுவிட்டது” என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி விமர்சித்துள்ளார்.

இது குறித்து டெல்லியிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் ஸ்மிருதி இராணி கூறும்போது, “ஒரே விவகாரத்தில் ராகுல் காந்தி எப்படி பல்வேறு வழிகளில் பகடைகளை உருட்டுகிறார் என்று உங்களுக்கு நான் ஆதாரம் காட்ட விரும்புகிறேன். கடந்த 2023 ஜூலை 2-ம் தேதி தெலங்கானாவில் பேசிய ராகுல் காந்தி, ‘கேசிஆர் ஊழல்வாதி, மதுபான கொள்கையில் ஊழல் நடந்துள்ளது, இதுகுறித்து அனைத்து அமைப்புகளுக்கும் தெரியும்’ என்று கூறியிருந்தார்.

‘பாரத் ராஷ்டிர சமிதி கட்சி, பாஜகவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. ஏனென்றால் டெல்லி மதுபான கொள்கை ஊழலில் தெலங்கானா முதல்வரின் மகள் கவிதாவுக்கு உள்ள தொடர்பு குறித்து மத்திய அரசுக்குத் தெரியும். எனினும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என்றார் ராகுல் காந்தி.

அதேபோல், காங்கிரஸ் கட்சி 2023 ஜூன் 2-ம் தேதி மதுபானக் கொள்கை ஊழல் குறித்து டெல்லி போலீஸுக்கு கடிதம் எழுதியது. இதில் யார் உண்மையானவர்? முன்பு பேசியவரா? அல்லது இப்போது நாம் பார்க்கும் ஒருவரா? அன்று தெலங்கானாவில் பேசியவரா அல்லது இன்று டெல்லியில் பேசியவரா? யார் உண்மையானவர்?” என்று ஸ்மிருதி இராணி கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் கூறுகையில், “அரசியல் சாசனப் பதவியில் அமர்ந்து நேர்மையை மேற்கோள் காட்டும் ஒருவர், அரவிந்த் கெஜ்ரிவாலின் செயல்களின் மூலம் அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி ஊழலை எப்படி வரையறுத்தார் என்பது குறித்த விவரங்கள் நமக்கு கிடைத்துள்ளன. இன்று நீதிமன்றத்தில் உண்மைகளை எடுத்துரைக்கும்போது, அரவிந்த் கெஜ்ரிவாலால் நியமிக்கப்பட்ட விஜய் நாயர் தலைமையின் கீழ் சில தேர்ந்தெடுக்கப்பட்ட மதுபான நிறுவனங்கள் புதிய மதுபானக் கொள்கையை வகுத்தன என்று தெரிவிக்கப்பட்டபோது கெஜ்ரிவாலின் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை” என்று அவர் தெரிவித்தார்.