வரும் லோக்சபா தேர்தலில் தென்சென்னையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமாரின் மகனுமான ஜெயவர்தன் மீது போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என நான்கு முனை போட்டி உள்ளது. அதிமுகவை பொறுத்தமட்டில் வரும் லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 33 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. மீதமுள்ள 7 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தேமுதிகவுக்கு 5 தொகுதி, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தென்சென்னை லோக்சபா தொகுதியை பொறுத்தமட்டில் அதிமுக வேட்பாளராக ஜெயவர்தன் களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமாரின் மகனான ஜெயவர்தன் தென்சென்னை எம்பியாக 2014 தேர்தலில் வெற்றி பெற்றார். அதன்பிறகு 2019ல் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனிடம் தோற்ற நிலையில் மீண்டும் அவர் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் திமுக சார்பில் இந்த தொகுதியில் சிட்டிங் எம்பியாக உள்ள தமிழச்சி தங்க பாண்டியனுக்கு மீண்டும் திமுக வாய்ப்பு வழங்கி உள்ளது. பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இதனால் வரும் லோக்சபா தேர்தலில் தென்சென்னையில் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் நட்சத்திரத் தொகுதியாக பார்க்கப்படும் தென்சென்னையின் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மீது போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது தேர்தல் விதிகளை மீறி அவர் செயல்பட்டதாக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன.
இந்நிலையில் தான் சென்னை வேளச்சேரியில் விதிகளை மீறி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்தப்பட்டதோடு, சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக கம்பங்கள் நட்டு கொடிகள் கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக தேர்தல் பறக்கும் படையினர் தரமணி போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரைத் தொடர்ந்து கூட்டம் நடந்த தனியார் திருமண மண்டப உரிமையாளர் பாலாஜி மற்றும் வேட்பாளர் ஜெயவர்தன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.