நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் உள்ளது. இதற்கு தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் என பெயர் சூட்டும் பரிந்துரையை ஏற்க ஜனாதிபதி திரெளபதி முர்மு மறுத்துவிட்டார்.
தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் கடந்த 2012ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்துக்கு பெயர் மாற்றம் செய்ய அதிமுக அரசு முடிவு செய்தது. மேலும் பல்கலைக்கழகத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை சூட்ட திட்டமிடப்பட்டது. அதாவது தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் பெயரை தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிலிதா மீன்வள பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்ய அதிமுக ஆட்சிக்காலத்தில் மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. ஆளுநர் ஒப்புதல் தராததால் பெயர் மாற்றம் நடைமுறைக்கு வரவில்லை.
இதையடுத்து தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து பல்கலைக்கழக பெயர் மாற்றம் தொடர்பாக திமுக அரசு மசோதா நிறைவேற்றி ஆளுநர் ஆர்என் ரவிக்கு அனுப்பி வைத்தது. அதாவது மீன்வள பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயர் சூட்ட ஆளுநர் ஒப்புதல் தராததால் அதற்கு முன் இருந்த பெயரிலேயே மசோதா கொண்டு வரப்பட்டது. திமுகவின் இந்த மசோதா சட்டசபையில் நிறைவேறிய நிலையில் ஆளுநர் ஆர்என் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் ஆர்என் ரவி அந்த மசோதாவை கிடப்பில் போட்டார். அதன்பிறகு ஒருவழியாக அவர் ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் தான் நாகை மீன்வள பல்கலைக்கழகத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் வைக்கும் பரிந்துரையை ஜனாதிபதி திரெளபதி முர்மு நிராகரிப்பு செய்துள்ளார். தமிழக அரசின் சார்பில் அளிக்கப்பட்ட பரிந்துரையை அவர் நிராகரித்தார். மேலும் தமிழக ஆளுநர் அனுப்பிய பரிந்துரையை நிராகரிப்பதாக அரசுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு கடிதம் எழுதியுள்ளார். இதன்மூலம் நாகை மீன்வள பல்கலைக்கழகம் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் என்ற பெயரிலேயே தான் அழைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.