காசா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஃபா மீது தாக்குதல் நடத்துவதுதான் ஹமாஸ்க்கு எதிரான இலக்கை முழுமையடையச் செய்யும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், அங்குள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இந்த கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
காசாவில் உள்ள பெரும்பாலான மக்கள் ரஃபா பகுதியில்தான் உள்ளனர். இஸ்ரேல் ரஃபா மீது தாக்குதல் நடத்தினால் மிகப்பெரிய உயிரிழப்பு ஏற்படும். மனிதாபிமான உதவிகள் கிடைக்கப் பெறாமல் மக்கள் பெரிதும் அவதிப்படுவார்கள். அதனால் ரஃபா மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என ஜோ பைடன் நேதன்யாகுவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் மத்திய கிழக்கு பகுதியில் அமைதியை வலியுறுத்தி அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். நேற்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை சந்தித்தார். அப்போது ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் உலகளவில் தனிமைப்படுத்தும் நிலை அபாயம் ஏற்படும் என எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக ஆண்டனி பிளிங்கன் கூறுகையில் “ரஃபா மீது தாக்குதல் நடத்துவது என்பது அதிக மக்களை கொல்லும் அபாயம். இது மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் பெரும் அழிவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இது இஸ்ரேலை உலக நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தும் அபாயம் கொண்டது. மேலும் அதன் நீண்ட கால பாதுகாப்பு மற்றும் நிலைப்பாட்டை பாதிக்கும்” என்றார்.
முன்னதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, “ரஃபா மீது தாக்குதல் நடத்தும் திட்டத்திற்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால், இஸ்ரேல் தனியாக செல்லும்” எனக் கூறியிருந்தார்.
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் இதுவரை 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.