தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை ஜிகே வாசன் இன்று வெளியிட்டார்.
பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஈரோடு, தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 3 தொகுதிகளில் தமாகா போட்டியிடும் என்று அக்கட்சி தலைவர் ஜிகே வாசன் அறிவித்தார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு டெல்டா பகுதிகளில் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. அதனால் ஈரோடு, மயிலாடுதுறை, தஞ்சை ஆகிய 3 தொகுதிகளை ஜி.கே.வாசன் கேட்டதாக தெரிகிறது. ஆனால், அதற்கு பாஜக ஒத்துக்கொள்ளவில்லை. இதனால், ஈரோடு, தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, ஈரோடு தொகுதிக்கு விஜயகுமாரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு வேணுகோபாலும் போட்டியிடுவார்கள் நேற்று ஜிகே வாசன் அறிவித்தார். எனினும், கனிமொழி போட்டியிடும் தூத்துக்குடி தொகுதியில் வேட்பாளர் யார்? என்பதை நாளை அறிவிப்பதாக நேற்றைய தினம் ஜிகே வாசன் அறிவித்தார். திமுக சார்பில் தற்போதைய சிட்டிங் எம்பியாக இருக்கும் கனிமொழி போட்டியிடுவதால் தூத்துக்குடி தொகுதி ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளது. தூத்துக்குடி தொகுதியில் அதிமுக தரப்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். இந்த நிலையில், தான் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை ஜிகே வாசன் இன்று வெளியிட்டார். அதன்படி, தூத்துக்குடியில் விஜயசீலன் போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளார்.
தமிழகத்தில், லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு அதிமுக, திமுக, பாஜக ஆகியவை தனித்தனியே கூட்டணி அமைத்தும் நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிடுகிறது. இதனால் இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய முஸ்லீம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் உள்ளன. இவற்றிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் மனிதநேய மக்கள் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்றாலும் திமுக கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவேன் என அக்கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பாஜக கூட்டணியில் பாமக, தமாக, அமமுக, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.