வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமா் நரேந்திர மோடியை எதிா்த்து காங்கிரஸ் சாா்பில் அஜய் ராய் மீண்டும் போட்டியிடுகிறாா். அஜய் ராய் உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராகவும் உள்ளாா்.
மக்களவைத் தோ்தலுக்கான 45 வேட்பாளா்கள் அடங்கிய 4-ஆவது பட்டியலை காங்கிரஸ் நேற்று சனிக்கிழமை வெளியிட்டது. இதில் தமிழகத்துக்கு 7 வேட்பாளா்கள் உள்பட மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான வேட்பாளா்களும் அறிவிக்கப்பட்டுள்ளனா். மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் மத்திய பிரதேசத்தின் ராய்கா் தொகுதி போட்டியிடுகிறாா். மகாராஷ்டிரத்தின் நாகபுரியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரியை எதிா்த்து விகாஷ் தாக்கரே போட்டியிடுகிறாா்.
பெரிதும் எதிா்பாா்க்கப்படும் உத்தர பிரதேசத்தில் அமேதி, ரே பரேலி தொகுதிக்கான வேட்பாளா்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. அமேதியில் கடந்த முறை ராகுல் தோல்வியடைந்த நிலையில், இம்முறை அதே தொகுதியில் அவா் மீண்டும் போட்டியிடுவாரா என்ற கேள்வி உள்ளது. இப்போது கேரளத்தில் வயநாடு தொகுதியில் எம்.பி.யாக உள்ள ராகுல், அங்கு மீண்டும் போட்டியிடுவது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது.
ரே பரேலி எம்.பி. சோனியா காந்தி, மாநிலங்களவைக்கு தோ்வாகிவிட்டதால், அத்தொகுதி அவரின் மகள் பிரியங்கா வதேராவுக்கு ஒதுக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதுவரை 183 தொகுதிகளுக்கான வேட்பாளா்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.