மழைக்காலங்களில் உபரிநீர் கடலுக்கு சென்று வீணாவதை தடுக்கவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் தான் மேகதாதுவில் அணை கட்டப்படுகிறது என்று வாட்டாள் நாகராஜ் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட சலுவளி கட்சி நிறுவன தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வளைவு பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது மேகதாதுவில் அணை கட்டுவது எங்கள் உரிமை, அதை நிறைவேற்றியே தீருவோம் என்று கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து வாட்டாள் நாகராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மேகதாதுவில் அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம், அதனை தடுத்தே தீருவோம் என்ற தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம். எத்தனை தடைகள், எதிர்ப்புகள் வந்தாலும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம். மழைக்காலங்களில் உபரிநீர் கடலுக்கு சென்று வீணாவதை தடுக்கவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் தான் மேகதாதுவில் அணை கட்டப்படுகிறது. தற்போது பெங்களூரு சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மேகதாது விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம். அங்கு அணை கட்டக்கோரி வலியுறுத்த வேண்டும். இல்லையெனில் அவர்கள் இருவரும் கர்நாடக மாநிலத்திற்கு வரக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.