ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: கனிமொழி!

ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை திறக்க உச்சநீதிமன்றத்தில் முயற்சித்தப்போது மக்களின் பக்கம் நின்று ஆலையை நிரந்தரமாக மூடியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தனது தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி தெரிவித்தார்.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன்பு உள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தைத் தொடங்கினர். பிரச்சாரத்தில் கனிமொழி பேசியதாவது:-

தூத்துக்குடி என்பது எனக்கு இரண்டாவது தாய் வீடாக உணரக் கூடிய வகையில் உள்ளது. நாடும் நமது, நாற்பதும் நமது என்ற வகையில் நாம் பணியாற்ற வேண்டும் எனவும் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டு தமிழகத்துக்கு வர வேண்டிய நிதியையும், ஏன் வெள்ள நிவாரணம் கூட தராமல் வஞ்சித்துக் கொண்டிருக்கும் ஒன்றிய பாஜகவை அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பிரதமர் மோடி தற்போது அடிக்கடி தமிழகத்துக்கு வருகிறார். வெள்ளம் பாதித்த நேரங்கள் கூட வராத பிரதமர் தற்போது வருகிறார் வந்து திமுகவை அழித்து விடுவதாக பேசி வருகிறார் திமுகவை யாராலும் அழிக்க முடியாது, அழித்து விடுவேன் என சொன்னவர்கள் தான் காணாமல் போய் உள்ளனர். திமுக ஆட்சி மூலம் இந்த நாட்டுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறது. அதனால்தான் தற்போதைய இந்த தேர்தல் அறிக்கையில் கூட மகளிர் உரிமைத் தொகையை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் எனவும் அதுபோல் காலை உணவுத் திட்டத்தையும் நாடு முழுவதும் அமல் செய்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒன்றிய பாஜக ஆட்சியில் பெட்ரோல் விலை டீசல் விலை மற்றும் கேஸ் விலை ஏற்றி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நமது இந்தியா கூட்டணி அரசு வரும்போது பெட்ரோல் விலை ரூபாய் 75, டீசல் விலை ரூபாய் 65, அதுபோல் காஸ் சிலிண்டர் விலை 500 ஆக அனைத்தும் குறைக்கப்படும். மக்களை விலைவாசியிலிருந்து காப்பாற்றும் அரசாக அந்த அரசு செயல்படும் எனவும் தெரிவித்தார். மக்களுக்கு எந்தவித நிதி உதவியும் செய்யாமல் அதே போல ஒரு பைசா கூட வழங்காமல் தமிழ்நாட்டிலிருந்து வரி வசூல் பண்ணி அங்கே இருக்கக்கூடிய ஒன்றிய அரசுக்கு நாம் ஒரு ரூபாய் கொடுத்தால், அவர்கள் நமக்குத் திருப்பி கொடுப்பது 26 பைசா, ஆனால் உத்தரப் பிரதேசத்திலிருந்து 1 ரூபா வரி கொடுத்தால் 2 ரூபாய் 2 பைசா. எந்த அளவுக்கு அவர்கள் தமிழகத்தை, தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அதே போல ஒன்றிய பாஜக கொண்டு வந்த சட்டத்திற்கு டெல்லியில் ஆதரவு கொடுத்தது அதிமுக. நாங்கள் இப்போது பிரிந்து நிற்கிறோம் என்றால் நம்பாதீர்கள் இரண்டு ஸ்டிக்கரும் மீண்டும் இணைந்து கொள்ளும். இங்கே இருக்கும் பெண்களின் உயர்கல்விக்காகப் புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் வழங்கி வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த ஆலையை மீண்டும் திறக்க வேண்டுமென்ற போது, முதலமைச்சர் மக்கள் பக்கம் நின்று ஆலையை மூட நடவடிக்கை எடுத்தார். வரக்கூடிய இந்த தேர்தலிலே தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலிருந்தே பாஜக விரட்டி அடிக்கப்பட வேண்டும். இந்தியா கூட்டணி இங்கு ஆட்சி அமைக்க வேண்டும்.

நம்முடைய இளைஞர்கள் கல்விக்காக வாங்கி இருக்கக் கூடிய கடன் ரத்து செய்யப்படும். அதுமட்டுமில்லாமல் நீங்க வெளியூர் போகும்போது ஒவ்வோர் இடத்திலும் சுங்கச்சாவடியில் நிறுத்தி காசு வாங்குகிறார்கள் அந்த சுங்கச்சாவடியில் வாங்கக்கூடிய காசு எல்லாம் நிறுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் அளித்து மீண்டும் உங்களோடு பணியாற்றக் கூடிய வாய்ப்பை நீங்கள் எனக்கு அளிக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். இவர்கள் அரசியலால் மணிப்பூரில் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டனர், அதனை நான் கண்கூடாகப் பார்த்தேன். நான் பலமுறை தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க கோரிக்கை வைத்தேன், மறுக்கப்பட்டது. ஆனால், அம்பானி வீட்டில் கல்யாணம் ஒரு சின்ன விமான நிலையத்தை, பத்து நாட்களில் பன்னாட்டு விமான நிலையமாக மாற்றித் தருகிறார் பிரதமர் மோடி. அம்பானி, அதானி உத்தரவு போட்டால் அது நடக்கும். மக்கள் உதவி கேட்டால் நடக்காது. மக்களுக்காக பணியாற்றக்கூடிய இந்தியா கூட்டணி ஆட்சியில் அமர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.