இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியக் குழுவான ஹமாஸுக்கும் காசாவில் போர் நிறுத்தத்திற்கு முதல் முறையாக கோரிக்கை வைத்துள்ளது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் படையினர், ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை சுட்டுக் கொன்றனர். பலரை பிணைக் கைதிகளாக பாலஸ்தீனத்திற்கு பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. வான் வழியாகவும், தரை வழியாகவும் நடத்தப்படும் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். உண்ண உணவின்றி, தங்குவதற்கு இடமில்லாமல் காசாவில் மக்கள் தவித்து வருகின்றனர். அண்மையில் காசா நகரில் உணவு உள்ளிட்ட உதவிகளுக்காக வரிசையில் நின்று கொண்டிருந்த பாலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இப்படியான சூழலில், போரை கைவிட உலக நாடுகள் பலரும் வலியுறுத்தி வருகின்றன. போரை தடுக்க ஐநா பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதும், இஸ்ரேல் அதை மதிக்கவில்லை. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்த தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில் அமெரிக்கா முன்மொழிந்த நகல் தீர்மானம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டது. காசாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் எகிப்திய எல்லைக்கு ஐ.நா தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் பயணம் மேற்கொண்டுள்ளார். இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடுமையான போர் நிலவி வரும் நிலையில் போர் நிறுத்தத்துக்கு மீண்டும் அழைப்பு விடுக்கும் வகையில் அவர் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஐந்து மாதங்களாக நடந்து வரும் போர் காரணமாக பல லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் அவதியுறுவதாக ஐ,நா கவலை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானங்களை அமெரிக்கா இதற்கு முன்பு ஏற்க மறுத்தது. கடந்த வாரம் வெள்ளியன்று, பணயக்கைதிகளை விடுவிப்பதோடு இணைந்த போர்நிறுத்த தீர்மானத்தை முன்வைத்தது. அந்தத் தீர்மானத்தை ரஷ்யாவும், சீனாவும் ஏற்க மறுத்தன. இந்நிலையில் பாதுகாப்பு கவுன்சிலின் 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட தீர்மானம், ரமலான் மாதத்திற்கான உடனடி போர்நிறுத்தம், பணயக்கைதிகளை உடனடியாக மற்றும் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரியது. நேற்று (மார்ச் 25) நடந்த வாக்கெடுப்பில் அமெரிக்கா பங்கேற்காத நிலையில், 15 நாடுகளை கொண்ட கவுன்சிலின் மற்ற உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை அமெரிக்கா பலமுறை தடுத்துவிட்டது, ஆனால் மக்கள் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், காசாவில் வரவிருக்கும் பஞ்சம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்ததால், தீர்மானத்தை வீட்டோ அதிகாரம் மூலம் தடுக்காமல், வாக்களிப்பை புறக்கணித்துள்ளது.