வரும் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி ‛மைக்’ சின்னத்துக்கு பதில் ‛படகு, பாய்மர படகு’ உள்ளிட்ட சின்னங்களில் ஒன்றை கேட்டது. இந்நிலையில் தான் படகு, பாய்மர படகு சின்னம் எல்லாம் தர முடியாது என நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்த நிலையில் ‛மைக்’ சின்னத்திலேயே தேர்தலை எதிர்கொள்ளுங்கள் என அதிரடியாக தெரிவித்துள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி போட்டியிட உள்ளது. வழக்கம்போல் சீமான் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து களம் காண்கிறார். மேலும் ஆண்,பெண் இடையே பாகுபாடு காட்டாமல் தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதியோடு புதுச்சேரியையும் சேர்த்து 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சீமான் அறிவித்துள்ளார். இதில் 20 தொகுதிகளில் ஆண்களும், 20 தொகுதிகளில் பெண்களும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி புதிய சிக்கலை எதிர்கொண்டது. அதாவது வேட்பாளர்கள் அறிவித்தாலும் கூட அந்த கட்சியின் சின்னம் எது? என்பது பெரிய குழப்பம் நீடிக்க தொடங்கியது. அதாவது இந்திய தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி, பதிவு செய்யப்பட்ட கட்சி என 2 வகைகள் உள்ளன. இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் இருக்கும். மாறாக பதிவு செய்யப்பட்ட கட்சிக்கு ஒவ்வொரு தேர்தலிலும் இந்திய தேர்தல் ஆணையம் தான் சின்னம் ஒதுக்கும். இந்த வேளையில் ஒரு தேர்தலில் ஒதுக்கீடு செய்யப்படும் சின்னத்தை அடுத்த தேர்தலில் பெற வேண்டும் என்றால் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் முன்கூட்டியே விண்ணப்பம் செய்ய வேண்டும். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி கடந்த லோக்சபா தேர்தல் மற்றும் கடந்த சட்டசபை தேர்தல்களின்போது கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது. இதனால் கரும்பு விவசாயி சின்னத்தை வரும் லோக்சபா தேர்தலில் பெற வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சி முன்கூட்டியே விண்ணப்பம் செய்திருக்க வேண்டும்.
ஆனால் சீமானின் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்துக்கு சரியான நேரத்தில் விண்ணப்பிக்கவில்லை. இதனால் கரும்பு விவசாயி சின்னம் என்பது பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கரும்பு விவசாயி சின்னத்தை பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சியிடம் விட்டு கொடுக்கும்படி நாம் தமிழர் கோரிக்கை வைத்தது. ஆனால் அவர்கள் விட்டு கொடுக்க மறுத்துவிட்டனர். மேலும் சீமான் தொடர்ந்த வழக்கிலும் சாதகமான உத்தரவு வரவில்லை.
இத்தகைய சூழலில் தான் நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ‛மைக்’ சின்னத்தை ஒதுக்கியது. ஆனால் சீமான் தரப்பில் வேறு சின்னம் கேட்கப்பட்டது. அதாவது படகு அல்லது பாய்மர படகு ஒதுக்கும்படி நாம் தமிழர் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இ-மெயில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் இன்று நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துள்ளது. அதாவது நாம் தமிழர் கட்சி கேட்ட படகு அல்லது பாய்மர படகு சினன்த்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவுிட்டது. அதோடு நாம் தமிழர் கட்சிக்கு ‛மைக்’ சின்னத்தையே வழங்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் வரும் லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி ‛மைக்’ சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளது. இதுபற்றி தற்போது வரை நாம் தமிழர் கட்சி சார்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.