சந்தேஷ்காலி பாஜக வேட்பாளர் ரேகாவிடம் உரையாடிய பிரதமர் மோடி!

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில் பாதிக்கப்பட்டவரும், பசிர்ஹத் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான ரேகா பத்ராவை, பிரதமர் மோடி தொலைபேசியில் அழைத்துப் பேசினார். அப்போது ரேகாவின் தேர்தல் பணிகள் குறித்து பிரதமர் விசாரித்தார்.

ரேகா பத்ராவுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, தொகுதி மக்களின் மனநிலை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து ரேகாவை, ‘சக்தி ஸ்வரூபம்’ என்று அழைத்தார். பெங்காலியில் தனது பேச்சைத் தொடங்கிய பிரதமர், “நீங்கள் ஒரு பெரிய பொறுப்பை ஏற்கப் போகிறீர்கள் எவ்வாறு உணருகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த ரேகா பத்ரா, “நான் சிறப்பாக உணருகிறேன். உங்களின் கரங்கள் என்னை ஆசீர்வதித்தும், சந்தேஷ்காலின் பெண்களுடனும் உள்ளன. கடவுள் ராமரே எங்களை ஆசீர்வதிப்பது போல உள்ளது. எங்களுக்கு மிகப் பெரிய கொடுமை நடந்தது. சந்தேஷ்காலியில் உள்ள பெண்களுக்கு மட்டும் இல்லை. பசிர்ஹத்தில் உள்ள அனைத்து பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாங்கள் கோரினோம். 2011-ல் எங்களால் வாக்களிக்க முடியவில்லை. இந்தமுறை நிச்சயம் வாக்களிப்போம்” என்றார் ரேகா.

அவரது தைரியத்தைப் பாராட்டிய பிரதமர் மோடி, “ரேகா ஜி, சந்தேஷ்காலியில் நீங்கள் மிகப் பெரிய போரில் வெற்றி பெற்றுள்ளீர்கள். ஒருவகையில் நீங்களும் சக்தியின் ஸ்வரூபம் தான். நீங்கள் பல சக்திவாய்ந்த மனிதர்களைச் சிறைக்கு அனுப்பி உள்ளீர்கள். இந்தத் தேர்தலில் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு இந்த தைரியம் எங்கிருந்து வந்தது என்று ஏதாவது யோசனை உள்ளதா?” என்றார்.

மேலும், வரும் தேர்தலில் அவர்கள் வாக்களிக்க அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் இந்திய தேர்தல் ஆணையம் ஏற்படுத்தித் தரும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

பிரதமரிடம் பேசிய பின்பு அது குறித்து கருத்து தெரிவித்த ரேகா பத்ரா, “நான் பிரதமரிடம் பேசினேன். அவர் என்னுடனும் சந்தேஷ்காலியில் உள்ள பிற பெண்களுடனும் நிற்பதாக கூறினார். இதை நான் பாக்கியமாக கருதுகிறேன். பிரதமர் மோடி சந்தேஷ்காலிக்கு வந்து எனக்காக பிரச்சாரம் செய்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன். ஒருபோதும் பிரதமரோ, பாஜகவோ புகார் தெரிவிக்கும் அளவுக்கு நடந்துகொள்ள மாட்டேன். நான் தேர்தலில் வெற்றி பெற்றால் பசிர்ஹத்தில் உள்ள அனைத்து மக்களுக்காகவும் பாடுபடுவேன். சந்தேஷ்காலி சம்பவம் உண்மை இல்லை என்று கூறுபவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். உங்களுடைய தவறை திருத்திக் கொள்ள இதுவே சரியான தருணம்” என்றார் ரேகா.