இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகமானவை: சத்யபிரத சாஹு

பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் நம்பகத்தன்மை உடையது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு உறுதிபட தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதுதொடர்பாக பேசினார். அதைத்தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் பொதுத்தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடத்தப்படுகிறது. வாக்குப்பதிவின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவது, குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மட்டும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் இயந்திரம் பயன்படுத்துவது, தேர்தல் முடிந்த பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது என அனைத்து நிலைகளிலும் வெளிப்படையான அணுகுமுறையையே இந்திய தேர்தல் ஆணையம் பின்பற்றுகிறது.

வாக்குப்பதிவில் தேசிய சராசரி 67 சதவீதம். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 73 முதல் 74 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இது வரவேற்கத்தக்கது. இருந்தாலும் இந்த சதவீதம் மேலும் அதிகரிக்க வேண்டும். கிராமப் பகுதிகளில் பதிவாகும் வாக்குப்பதிவைவிட நகரப் பகுதிகளில் வாக்குப்பதிவு குறைவாகத்தான் இருக்கிறது. எனவே, நகரப் பகுதிகளில் இருப்பவர்கள் எந்த சிரமம் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும்.

இளைய தலைமுறையினர் கல்வி, வேலைவாய்ப்பு காரணமாக இடம் பெயர்வதால் அவர்கள் வாக்களிப்பதும் குறைவாக உள்ளது. இதற்கு அவர்கள் வெளி மாநிலங்களுக்கு செல்லும்போது அங்கு தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதில்லை. வாக்காளர் ஹெல்ப்லைன் மூலமாக தாமாகவே வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்கலாம். சரிபார்ப்புக்குப் பிறகு புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். இடப்பெயர்வு உள்ளிட்ட காரணங்களால் சுமார் 40 லட்சம் பேரின் பெயரை நீக்கி உள்ளோம்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குடிநீர், மின்வசதி, கழிப்பிடம், முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்காக சாய்தள பாதை உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம் 85 மற்றும் அதற்கு மேல் வயது உள்ளவர்கள் வாக்குச்சாவடிக்கு வர முடியாத நிலை இருந்தால், அவர்கள் 12 டி படிவம் மூலம் விவரம் அளித்தால் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க ஆவண செய்யப்படுகிறது. இவ்வாறு வாக்களிக்க 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தேர்தல் பணியில் 4 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், 2.5 லட்சம் காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அரசு அதிகாரிகளில் 50 சதவீதத்துக்கு மேல் பெண்கள் உள்ளனர். வாக்களிப்பதை அனைவரும் கடமையாகக் கருத வேண்டும். இவ்வாறு சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:-

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இவை மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது. மக்களுக்கும் சந்தேகம் இல்லை. தேர்தலில் தோற்கும் கட்சிகள்தான் சந்தேகத்தை கிளப்புகின்றனர். யாருக்கு வாக்களித்தோம் என வாக்காளர்கள் தெரிந்து கொள்ளும் விவி பாட் இயந்திரம் 5 சதவீதம் வாக்குச்சாவடிகளில்தான் பயன்படுத்துகிறது. இதை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்த இன்னும் பல ஆண்டுகள் ஆகும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணத் தொடங்கியதில் இருந்து 12 மணி நேரத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.