ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் காலமானார்.
ஈரோடு மக்களவைத் தொகுதி எம்பியாக தற்போது பதவி வகித்து வருபவர் அ.கணேசமூர்த்தி (77). கடந்த 2019-ம் ஆண்டு, மக்களவைத் தேர்தலின்போது, திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலில் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு கணேசமூர்த்தி வெற்றி பெற்றார். ஐந்து ஆண்டுகளாக எம்பியாக பதவி வகித்து வந்த கணேசமூர்த்திக்கு, இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) அன்று ஈரோடு பெரியார் நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்த கணேசமூர்த்திக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுய நினைவு இல்லாமல் இருந்த அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கும் நோக்கில், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உடற்கூறு ஆய்வு முடிவுகள் வெளிவந்த பிறகே அவரது உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்.
மதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் கணேசமூர்த்தி . இவர் கட்சியின் பொருளாளராகவும் பதவி வகித்தவர். 1978 ஆம் ஆண்டு திமுக மாணவரணி பொறுப்பில் இருந்த இவர், பின்னர் ஒருங்கிணைந்த பெரியார் (ஈரோடு) மாவட்ட திமுக செயலாளராக பொறுப்பு வகித்தார். 1993 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்ட போது அவருக்கு ஆரவு தெரிவித்து வெளியேறிய 9 மாவட்ட செயலாளர்களில் ஒருவர் கணேசமூர்த்தி. 1989 ஆம் ஆண்டு திமுக சார்பில் மொடக்குறிச்சி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். மதிமுக தொடங்கியதிலிருந்து ஈரோடு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்த இவர் 2016 ஆம் ஆண்டு முதல் மதிமுக பொருளாளராக உள்ளார். இவர் 1998ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பழனி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2006 ஆம் ஆண்டு வெள்ளகோவில் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு நடந்த ஈரோடு மக்களவை தேர்தலிலும் அவர் தோல்வி அடைந்தார். 2009, 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் ஈரோடு தொகுதியிலிருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். 2009ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக சார்பில் வென்ற ஒரே வேட்பாளர் கணேசமூர்த்திதான். மதிமுக சார்பில் 4 பேர் போட்டியிட்ட நிலையில் கணேசமூர்த்தி மட்டுமே வென்றார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவனை 49 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஈரோடு மக்களவைத் தொகுதியின் முதல் எம்பியாவார்.
2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் இவர் மதிமுக பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்து அந்த சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். ஒருவர் மாற்றுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றால் அவர் சொந்த கட்சியிலிருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு பின்னர் மாற்று கட்சியில் உறுப்பினராக வேண்டும். அப்போதுதான் அவர் மாற்றுக் கட்சியின் சின்னத்தை பயன்படுத்த உரிமைக்குரியவர் ஆவார்.
இவர் 1947 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவருக்கு பாலமணி என்ற மனைவி இருந்தார். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார். இவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இவர் சென்னிமலையில் வசித்து வந்தார். இவருடைய தொழில் விவசாயம் ஆகும். இந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் தனக்கு சீட் கிடைக்கும் என நம்பியிருந்த கணேசமூர்த்திக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. இந்த காரணத்தால் அவர் விஷம் குடித்துவிட்டு ஆபத்தான நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் காலமானார்.