கச்சத்தீவு விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த நிலையில், அமைச்சர் டிஆர்பி ராஜா, சீன விவகாரத்தை திசை திருப்பவே பிரதமர் மோடி, கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்து இருப்பதாக சாடியுள்ளார்.
தழிழக பாஜக தலைவர் அண்ணாமலை கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக ஆர்டிஐ மூலம் பெற்ற தகவல்களைப் பகிர்ந்து இருந்தார். அதைப் பிரதமர் மோடியும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அதில், “சிறிய தீவுக்கு நான் எந்த முக்கியத்துவமும் கொடுக்க போவது இல்லை. கச்சத்தீவு உரிமையை விட்டுக்கொடுப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை” என்று அப்போதைய பிரதமர் நேரு கூறியது இடம்பெற்றிருந்தது. இந்த விவரங்களை முன்வைத்து பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை விமர்சித்து வருகின்றனர்.
இதற்கு காங்கிரஸ் பதிலடி தந்து வருகிறது. கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், “இலங்கையுடனான நட்புறவுக்காக 1974-ல் கச்சத்தீவு வழங்கப்பட்டது. பிரதமர் மோடியும் கூட, வங்கதேசத்துடன் எல்லைகளைப் பரிமாற்றம் செய்துதான் இருக்கிறார். 10 ஆண்டுகளில் இப்போது திடீரென எல்லை பிரச்சனை, இந்திய நிலப் பகுதி பற்றி எல்லாம் மோடி விழித்துக் கொண்டிருக்கிறார்” என்று சாடியிருந்தார்.
இதனிடையே இன்று மோடி தனது எக்ஸ் தளத்தில், “கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது தொடர்பாக வெளியாகும் புதிய தகவல்கள் திமுகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகின்றன. தமிழக மக்களின் நலன்களைப் பேண திமுக எதுவுமே செய்யவில்லை என்பது புலப்படுகிறது” என்று சாடியுள்ளார்.
கச்சத்தீவு விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், பிரதமர் மோடியை திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், அமைச்சர் டிஆர்பி ராஜா, சீன விவகாரத்தை திசை திருப்பவே பிரதமர் மோடி, கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்து இருப்பதாக சாடியுள்ளார். இது தொடர்பாக டிஆர்பி ராஜா கூறுகையில், நமது நாட்டிற்குள் ஊடுருவி நமது ஊர்களுக்கு சீனப்பெயர்கள் சூட்டி வரும் சீனாவை கண்டு தொடை நடுங்கும் முதுகெலும்பு இல்லாத பாஜக அரசு, சீனாவுக்கு இந்தியாவை தாரை வார்க்கவா துடிக்கிறது. இதற்குதான் கச்சத்தீவு திசை திருப்பும் நாடகமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.