உங்கள் வீட்டின் பெயரை நான் மற்றினால் வீடு என்னுடையது ஆகிவிடுமா? அருணாசல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா பெயரை மாற்றுவது உரிமை கொண்டாடுவது ஆகாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
ஆசியாவில் சர்வ வல்லமை பொருந்திய நாடாக வலம் வர துடிக்கும் சீனாவின் கனவுக்கு முட்டுக்கட்டை போடும் நாடாக இந்தியாவே உள்ளது. இதனால், இந்தியா மீது கடும் எரிச்சலில் உள்ள சீனா, அவ்வப்போது எல்லையில் வாலாட்டி வருகிறது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாசல பிரதேசத்தை தங்களுக்கு சொந்தமானது என அடாவடி காட்டும் சீனா அவ்வப்போது அத்துமீறலிலும் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுக்க தவறுவது இல்லை. இந்த நிலையில், அருணாசல பிரதேசத்தின் 30 இடங்களுக்கு பெயரை மாற்றி சீனா அடாவடி காட்டியுள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அருணாசல பிரதேச எல்லைக் கட்டுப்பாடு அருகே ராணுவம் கண்காணிப்பில் உள்ளது. அருணாசல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒரு அங்கம் தான். உங்கள் வீட்டின் பெயரை நான் மற்றினால் வீடு என்னுடையது ஆகிவிடுமா? அருணாசல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா பெயரை மாற்றுவது உரிமை கொண்டாடுவது ஆகாது” என்றார்.
எப்போதும் இந்தியாவுடன் எல்லையில் அத்துமீறல் போக்கினை கையாண்டு வரும் சீனா, அத்துமீறல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கிறது. கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதல் இந்தியா சீனா இடையே பிளவை ஏற்படுத்தியது. இதேபோல் இந்தியாவுக்குச் சொந்தமான பல பகுதிகளைச் சீனா தனக்குச் சொந்தமானது என்கிறது. எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சீனா இந்தியாவின் சில பகுதிகளை தங்களுக்கு சொந்தம் என்று கூறி வருகிறது. அந்த வகையில் தான் தற்போது இந்தியா சீன எல்லையில் உள்ள அருணாசல பிரதேச மாநிலத்தின் 30 இடங்களுக்குச் சீன பெயர் மாற்றம் செய்துள்ளது.