எனக்கு கடவுள் மீது கோபம் கிடையாது: ஆ ராசா!

எனக்கு கடவுள் மீது கோபம் கிடையாது. இங்குள்ள எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை இருப்போர் கடவுளை கும்பிடட்டும் என திமுக எம்பியும், நீலகிரி தொகுதி வேட்பாளருமான ஆ ராசா பேசியுள்ளார்.

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆ ராசா. திமுகவின் துணை பொதுச்செயலாளராக உள்ள ஆ ராசா நீலகிரி லோக்சபா தொகுதி எம்பியாக செயல்பட்டு வருகிறார். தற்போது லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் நீலகிரி (தனி) தொகுதியில் ஆ ராசா திமுக வேட்பாளராக களமிறங்கி உள்ளார். சிட்டிங் எம்பியான ஆ ராசாவை எதிர்த்து அதிமுகவில் லோகேஷ் தமிழ் செல்வன், பாஜகவின் மத்திய இணையமைச்சர் எல் முருகன், நாம் தமிழர் கட்சியில் ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். நான்கு முனை போட்டியால் நீலகிரி தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

குறிப்பாக ஆ ராசாவை எதிர்த்து மத்திய இணையமைச்சர் எல் முருகன் போட்டியிடுவதால் நீலகிரி லோக்சபா தொகுதி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. ஆ ராசாவை எடுத்து கொண்டால் அவர் தீவிர கடவுள் மறுப்பாளர். குறிப்பாக இந்து மதம் குறித்து அவர் கூறும் கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பும். சமீபத்தில் கூட கடவுள் ராமரை நாங்கள் ஏற்க மாட்டோம் என அவர் பேசிய கருத்து விவாதத்தை கிளப்பியது. இதனால் அடிக்கடி இந்து மதம் குறித்த சர்ச்சையில் ஆ ராசா சிக்கி வருகிறார். இத்தகைய சூழலில் தான் லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் கடவுள் மீது தனக்கு கோபமில்லை. நம்பிக்கையிருந்தால் கடவுளை வணங்கலாம் என்பது மட்டுமின்றி, மறைந்த அவரது மனைவி கூட தீவிர ராம பக்தை. வாரம் 3 நாட்கள் விரதம் இருந்ததாக கூறியுள்ளார்.

அதாவது நீலகிரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட குன்னூர் பகுதியில் ஆ ராசா நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார். பாஜக ஆட்சியில் அனைத்து இடங்களிலும் ஊழல் உள்ளது. பங்கு சந்தை உள்பட அனைத்து இடங்களிலும் ஊழல் செய்துவிட்டு நான் தான் விஸ்வகுரு. உலகத்தின் தலைவர் என சொல்கிறார்கள் என காட்டமாக சாடினார். இந்த வேளையில் ஆ ராசா, கடவுள் பக்தி தொடர்பாகவும் பேசினார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

என் மனைவி சனிக்கிழமை ராமரை கும்பிட்டு விரதம் இருந்தார். வியாழக்கிழமை எனக்காகவும், திங்கட்கிழமை சிவனுக்காக விரதம் இருந்தார். வாரத்தில் 3 நாட்கள் விரதம் இருந்தார். என் வீட்டில் பூஜை அறை இன்றும் உள்ளது. அந்த அம்மாவிற்கு நம்பிக்கை இருந்தால் அவர் பூஜை செய்தார். எனக்கு நம்பிக்கையில்லை. நான் பூஜை அறைக்கு சென்றது இல்லை. இங்குள்ள எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை இருப்போர் கடவுளை கும்பிடப்பட்டும். அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பக்தி என்பது தனிமனித தேவைக்கானது. என் ஆன்மாவை சுத்தப்படுத்த ஒரு கடவுள் இருந்தால் இருந்துவிட்டு போகட்டும். கள்ளம் இல்லாத உள்ளம் தான் கடவுள் என்று சொல். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம். கடவுள் மீது எனக்கு கோபம் இல்லை. கும்பிட்டு விட்டுப்போ. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இதனை பார்க்கும் பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் தேர்தல் நெருங்கிவிட்டதால் ஆ ராசா அந்தர் பல்டி அடித்துள்ளார். ராமர் மற்றும் கடவுள் வழிபாட்டுக்கு எதிராக பேசிய ஆ ராசாவின் மாற்றத்துக்கு தேர்தல் தான் காரணம் என விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.