பிரதமர் மோடி அரசு பத்தாண்டு ஆட்சியில் கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுக்காதது ஏன்: கீ.வீரமணி

பிரதமர் மோடி அரசு பத்தாண்டு ஆட்சியில் கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுக்காதது ஏன் என தி.க தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவின் வசம் இருந்த கச்சத் தீவு கடந்த 1974ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மூலமாக இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. கச்சத் தீவை மீட்க வேண்டும் என்பது திமுக, அதிமுக என தமிழக அரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கச்சத் தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ளது பாஜக.

மத்திய அரசிடம் இருந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பெற்ற ஆர்டிஐ தகவலை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, காங்கிரஸ் அரசு கச்சத் தீவை இலங்கைக்கு அலட்சியமாக விட்டுக்கொடுத்து விட்டதாகவும், திமுகவின் இரட்டை வேடத்தை அது முற்றிலுமாக தோலுறித்து காட்டியுள்ளது என்றும் விமர்சித்திருந்தார். ஆனால், இது தேர்தல் நேரத்தில் மற்ற பிரச்னைகளை மறைக்கும் வகையிலான பாஜகவின் வழக்கமான திசை திருப்பல் அரசியல் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இதுதொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், “கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்க்க காரணமானவர்கள் திமுகவினர் என்ற ஒரு அபாண்டமான பொய்க் குற்றச் சாட்டினை, பிரதமர் மோடி கூறியிருக்கிறார். காங்கிரஸ், திமுக மீது குற்றம் சுமத்தி பிரதமர் மோடி இப்போது பேசுவதன் நோக்கம் பாஜக மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைத் திசை திருப்புவதற்காகவே” என்று விமர்சித்தார்.

கச்சத் தீவை இலங்கைக்கு தந்ததைக் கண்டித்து, வன்மையான கண்டனக் குரலை தமிழ்நாடு முழுவதும் திமுக எழுப்பியது என்று தெரிவித்த கி.வீரமணி, “1974 ஜூன் 26 அன்று இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது முதல் திக, திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளன. உடனடியாக ஜூன் 29 அன்றே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார் அப்போதைய முதல்வர் கலைஞர். கச்சத் தீவு மீது இந்தியாவுக்கு அரசு உரிமை இருக்கும் வகையில் ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க வேண்டும் என தீர்மானம் போடப்பட்டது.

அதிமுக பிரதிநிதி மட்டும் தீர்மானத்தில் கையெழுத்து போடாமல் முன்னரே வெளிநடப்புச் செய்தார். திமுக தமிழ்நாடு முழுவதும் 1974, ஜூலை 14 அன்று கச்சத் தீவு ஒப்பந்த கண்டன நாள் கூட்டம் நடத்தியது. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் திமுக எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்து குரல் எழுப்பினர்” என்று விவரித்தார்.

மேலும், “காங்கிரஸ் மீது குறை கூறும் பிரதமர் மோடி அரசு பத்தாண்டு ஆட்சியில் கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? மோடி ஆட்சியில் தமிழ்நாடு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது தடுக்கப்படாதது ஏன்? பிரதமருக்கு அதிகாரமும் ஆட்சிப் பெரும்பான்மையும் உள்ள நிலையில், செய்ய வேண்டியதை செய்யத் தவறி விட்டு, திமுக மீது ஆதாரமற்ற பழி சுமத்துவது பிரதமர் பொறுப்புக்கு உகந்தது தானா” என்றும் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.