மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகவும், அவரது எடை 4.5 கி.கி குறைந்துள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை 9 முறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் கைவிட்டுவிட்டது. இதனையடுத்து கெஜ்ரிவாலின் வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தி அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. ஏற்கெனவே ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரனையும் சமீபத்தில்தான் அமலாக்கத்துறை கைது செய்திருந்தது. இதனையடுத்து கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது கடும் விமர்சனங்களை கிளப்பியது. இதனையடுத்து ஜெக்ரிவாலின் நீதிமன்ற காவல் கடந்த 1ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அவரை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். வழக்கு விசாரணையில், கெஜ்ரிவாலிடம் இன்னும் நிறைய விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது எனவே, நீதிமன்ற காவலை நீட்டிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், ஏப்ரல் 15ம் தேதி வரை கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு 2ம் எண் சிறை ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஏப்ரல் 19ம் தேதி நாடு முழுவதும் 22 மாநிலங்களில் முதற்கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், தற்போது கெஜ்ரிவாலின் காவலை நீட்டித்து வழங்கப்பட்டுள்ள உத்தரவு பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. அதேபோல திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகவும், அவரது உடல் எடையில் 4.5 கி.கி எடை குறைந்திருப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லி அரசின் கல்வித்துறை அமைச்சரும், ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான அதிஷி, இந்த தகவலை இன்று கூறியுள்ளார். தனது எக்ஸ் தளத்தில், “கெஜ்ரிவால் கடுமையான நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல் நிலை மோசமாகி வருகிறது. எடை 4.4 கிலோ குறைந்திருக்கிறது. பாஜக அரசு அவரது உடல் நலனை ஆபத்தில் வைத்திருக்கிறது. ஒருவேளை அவருக்கு ஏதேனும் நடந்தால், நாடு மட்டுமல்ல கடவுள் கூட அவர்களை மன்னிக்க மாட்டார்” என்று கூறியுள்ளார். ஆனால் ஆம் ஆத்மியின் இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்திருக்கிறது. திகார் சிறையில் இரண்டு மருத்துவர்கள் கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதித்ததாகவும், உடல் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் சிறை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.