தேர்தல் ஆணையத்தின் புதிய நடைமுறையால் 2% தவறு வருவதற்கு வாய்ப்பு உள்ளது என தேர்தல் ஆணையமே கூறியுள்ளது. 2% வாக்குகளில் வித்தியாசம் என்றால் அது சீர்செய்யப்பட வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்பாரதி தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடைமுறையை எதிர்த்து திமுக, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் முன்னாள் எம்.பி ஆர்.எஸ்.பாரதி இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் ஆணையத்தின் புதிய நடைமுறையால் 2% தவறு வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணையமே கூறியுள்ளது. கடந்த முறை செயல்படுத்திய நடைமுறையை மீண்டும் பின்பற்ற வேண்டும். 2% வாக்குகளில் வித்தியாசம் என்றால் அது சீர்செய்யப்பட வேண்டும். உதாரணத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 22 லட்சம் வாக்குகள் உள்ளன. அதில் 2% என்றால் 46,000 வாக்குகளில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையமே கூறியுள்ளது. ஒரு தொகுதியில் 46,000 வாக்குகள் என்பது சாதாரணமானது அல்ல. 1998 நாடாளுமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வேணுகோபால், சுமார் 200 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். கடந்த 2019 தேர்தலில் விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். அப்படி என்றால் 46000 வாக்குகளில் தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றால் முடிவே மாறிவிடும்.
எலெக்ட்ரானிக் ஓட்டு எந்திரங்களின் மீது அரசியல் கட்சிகளுக்கு நியாயமான சந்தேகம் இருக்கிறது. 3வது தலைமுறை இயந்திரங்களை அறிமுகம் செய்யும் தேர்தல் ஆணையம் தவறுகளை சரி செய்யவில்லை. ஈவிஎம் இயந்திரங்கள் தயாரிக்கும் இடங்களில் பாஜகவை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளது மேலும் சந்தேகத்தை எழுப்புகிறது, பாஜகவினர் இந்த இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பிரத்யேகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை இணைப்பது தேர்தல் ஆணைய விதிகளுக்கு முரணானது எனவும், வாக்குபதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கும், வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும் இடையில் அச்சு இயந்திரங்கள் வைக்க எந்த விதிகளும் வகை செய்யவில்லை எனவும், அவ்வாறு வைப்பது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் எனவும் திமுக தொடர்ந்துள்ள வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ஒப்புதல் வழங்க உரிய விதிகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும், கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கும் இடையில் அச்சு இயந்திரத்தை வைக்க கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.