கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய முடியாது: உயர்நீதிமன்றம்!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிய மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் ஜார்க்கண்ட் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இக்கட்சி இந்தியா கூட்டணியில் இருக்கிறது. அதேபோல கடந்த 21ம் தேதியன்று டெல்லி முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். முதலமைச்சராக இருப்பவர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். ஏற்கெனவே டெல்லியின் மூன்று அமைச்சர்கள் பல்வேறு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். எனவே கெஜ்ரிவாலின் கைது, ஆம் ஆத்மி மீதான பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளும் தனது கருத்தை தெரிவித்திருந்தன.

இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருப்பதால் கெஜ்ரிவாலை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டிருந்து. டெல்லியைச் சேர்ந்த சுர்ஜித் சிங் யாதவ் என்ற சமூக ஆர்வலர் இந்த வழக்கை தொடுத்திருந்தார். இந்த வழக்கை கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் பிரீதம் சிங் அரோரா ஆகியோர் கொண்ட அமர்வு, “முதலமைச்சர் பதவி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. நிர்வாக பிரச்னை ஏற்பட்டால் குடியரசுத் தலைவர், ஆளுநர் நடவடிக்கை எடுப்பார்கள். குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும்படி உத்தரவிட முடியாது” என்று கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்.

இந்நிலையில், கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி மீண்டும் ஒரு பொதுநல மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்து சேனா எனும் அமைப்பின் தேசிய தலைவர் விஷ்னு குப்தா இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு மீதான விசாரணை இன்று தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “டெல்லி முடங்கி போயுள்ளது. அரசு பணிகள் அனைத்தும் அப்படியே நின்றுவிட்டது. கெஜ்ரிவால் அரசியல் சாசன நம்பிக்கை மீறல் குற்றவாளி. எனவே அவர் பதவியில் நீடிக்க தகுதியில்லை” என்று கூறினார்.

அப்போது நீதிபதிகள் மனுதாரரிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பினர். அதாவது, “முதல்வர் பதவியை ராஜினாமா செய்தாதது என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம். நீதிமன்றம் எப்படி இதில் தலையிட முடியும்? குடியரசுத் தலைவர் ஆட்சியோ அல்லது ஆளுநர் ஆட்சியோ நீதிமன்றத்தால் திணிக்கப்பட்டதற்கான முன்னுதாரணம் உங்களிடம் உள்ளதா? இது ஒரு நடைமுறைப் பிரச்சினை, சட்டப் பிரச்சினை அல்ல. நாங்கள் இதற்குள் செல்ல மாட்டோம். அரசு செயல்படவில்லை என்று எங்களால் எப்படி அறிவிக்க முடியும்? நீதிமன்றத்திற்கென சில முன்னுதாரணங்கள் இருக்கின்றன. எங்களால் ஒருநாள் ஒரு மாதிரியாகவும், மறு நாள் வேறு ஒரு மாதிரியாகவும் இயங்க முடியாது. ஏற்கெனவே இதே போன்ற பொதுநல வழக்கு ஒன்றை நாங்கள் தள்ளுபடி செய்திருக்கிறோம். நாங்கள் மாநிலங்களை நிர்வகிக்கவில்லை, நீதிமன்றத்தால் அனைத்தையும் செய்ய முடியாது” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.