சிரியாவில் ஈரான் நாட்டு தூதரகம் மீது இஸ்ரேல் விமானப் படை தாக்குதல் நடத்தியதில் 12 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் ஈரான் பெரும் தாக்குதலை நடத்தலாம் என்கிற அச்சம் அந்நாட்டில் உருவாகி இருக்கிறது.
சிரியாவின் தலைநகரில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்தன. இதில் இஸ்லாமிய புரட்சி படை தளபதிகள் 2 பேர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் ஈரானின் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரான் நாட்டின் பல நகரங்களில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி பதிலடி தந்தாக வேண்டும் என அந்நாட்டு மக்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதனால் வேறுவழியே இல்லாமல் இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் ஈரான் மிகப் பெரும் தாக்குதலை நடத்தலாம் என்கிற அச்சம் எழுந்துள்ளது.
ஈரான் தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் என்பதால் இஸ்ரேல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அனைவரது விடுப்புகளும் ரத்து செய்யப்பட்டு உடனே பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் GPS சேவைகள் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் மாநகரங்களில் போர் தாக்குதல்களில் இருந்து தப்பித்து வருவோருக்கு அடைக்கலம் தரும் முகாம்கள் திறக்கப்பட்டுவிட்டன.
தெஹ்ரான் பல்கலைக்கழகம் நோக்கி செல்லும் இந்த பேரணியில் புரட்சி காவல் படையின் தளபதி ஹுசைன் சலாமி பேசவுள்ளார். சலாமி, “எந்த அபாயமும் பதிலளிக்கமால் கடக்க போவதில்லை” என குறிப்பிடுவது இஸ்ரேல் மீதான தாக்குதலை குறிப்பதாக தெரிகிறது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்தினரிடையேயான மோதலில் ஈரான் பகிரங்கமாகவும் நேரடியாகவும் களத்தில் இறங்கினால் மிகப் பெரிய அளவில் யுத்தம் விரிவடையும் அபாயம் இருக்கிறது என்கின்றனர் சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்கள்.