பறக்கும் படையினரை மிரட்டிய பாஜக ஏபி முருகானந்தம் மீது வழக்கு பதிவு!

‘வாழ்நாள் முழுக்க கோர்ட்டுக்கு அலைய வைத்துவிடுவேன்’ என்று ஈரோடு கோபிசெட்டிப்பாளையம் அருகே சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் கண்காணிப்பு குழுவினரை திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம் மிரட்டினார். இந்த நிலையின் புகாரின் பேரில் ஏபி முருகானந்தம் மீது குன்னத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே இருப்பதால் தேர்தல் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் தீயாய் பணிபுரிந்து வருகின்றனர். இதேபோல், அரசியல் தலைவர்களும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியாகிவிட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், பரிசுபொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா.. வாக்களர்களுக்கு விநியோகிக்க கிஃப்ட் பொருட்கள் எதுவும் கொண்டு செல்லப்படுகிறதா? என தீவிர சோதனையில் பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள். இதற்காக சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரின் காரிலும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

அந்த வகையில் ஈரோடு கோபிசெட்டிபாளையம் பகுதியில் போலீசாருடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ பி முருகானந்தம் வந்துகொண்டிருந்தார். அந்த நேரத்தில் டிராபிக் ஏற்படும் என்று கருதிய கண்காணிப்பு நிலைக்குழுவினர் அவரது காரை ஓரமாக நிறுத்துமாறு கூறினர். அப்போது கொதித்தெழுந்த ஏ பி முருகானந்தம் கண்காணிப்பு நிலைக்குழுவினரை மிரட்டும் தொனியில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. காரை ஓரமாக நிறுத்தியதும், கண்காணிப்பு அலுவலரை பார்த்து, உங்க பெயர் என்னன்னு சொல்லுங்க.. என்னவாக இருக்கீங்க என்று கேட்டார். அவர் ஒவ்வொரு கேள்வியாக கேட்க, தேர்தல் ஆணைய கண்காணிப்பு குழுவினரும், போலீசாரும் ஒவ்வொரு கேள்விகளுக்காக பதில் சொல்லியபடி இருந்தனர். தொடர்ந்து பேசிய ஏபி முருகானந்தம், “இப்படித்தான் உங்களை மிரட்ட சொன்னாங்களா? எந்த மனிதராக இருந்தாலும் முதலில் மரியாதையாக சொல்லுங்க.. என்று ஆவேசமாக பேசினார்.

கண்காணிப்பு நிலைக்குழுவினரும், பவ்வியமாக, “செக் பண்ண சொல்லிருக்காங்க.. அதனால் செக் பண்றோம்.. நாங்கள் மிரட்டவே இல்லை.. டிராபிக் ஆகும் என்று கூறி தான் ஓரமாக வர சொன்னோம்..” என்று பதில் சொல்ல மீண்டும் டென்சன் ஆகி, உங்களிடம் நான் பேசவில்லை.. உங்களிடம் இப்போது யார் பேசியது? என்று தெனாவட்டாக பேசினார். மேலும், மரியாதையாக பேசி பழக வேண்டும்.. புரியுதா?.. இல்லையெனில் வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன். சரியா?… அப்போது, பதில் அளித்த போலீசார், “சார்.. நாங்கள் மரியாதையாக தானே பேசுகிறோம்.. அங்கே டிராபிக் ஆவதால் இங்கே ஓரமாக வரத்தான் சொன்னோம்.. யாரையுமே நாங்கள் மரியாதை குறைவாக பேசவில்லை” என்று கூற.. மீண்டும் பேசிய ஏபி முருகானந்தம், “மரியாதையாக பேசுங்க.. மரியாதையா பேசுங்க.. என்று சொல்லியபடி.. உங்க கிட்ட நான் பேசினேனா.. இவருகிட்ட தானே பேசிட்டு இருக்கேன்..”என்று கத்தினார். தொடர்ந்து போலீசார் சமாதானப்படுத்திய பின்னர் அங்கிருந்து கிளம்பி சென்றார். தேர்தல் ஆணைய பணியாளர்களிடம் பாஜக வேட்பாளர் மிரட்டும் வகையில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை மிரட்டியதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.