நான் கேட்டிருந்தா தென்சென்னையை திமுக தந்திருப்பாங்க: கமல்ஹாசன்!

‛‛நான் கேட்டிருந்தா தென்சென்னை தொகுதியை திமுக எனக்கு தந்திருக்கும். ஆனால் தமிழச்சி ஏமாந்து இருப்பாங்க” என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தென்சென்னை லோக்சபா தொகுதியில் சிட்டிங் எம்பியாக தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளார். இவர் மீண்டும் அந்த தொகுதியிலேயே போட்டியிடுகிறார். இங்கு பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்கி உள்ளார். அதேபோல் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தனும், நாம் தமிழர் சார்பில் தமிழ் செல்வியும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் தான் திமுக வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து திமுக கூட்டணியில் உள்ள நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று தீவிர பிரசாரம் செய்தார். அந்த சமயத்தில் தென்சென்னை தொகுதியில் ஏன் போட்டியிடவில்லை என அவர் விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக கமல்ஹாசன் பேசியதாவது:-

நான் கேட்டிருந்தால் தமிழச்சி நிற்கும் சீட்டை எனக்கு கொடுத்து இருப்பாங்க. ஆனால் தமிழச்சி ஏமாற்றமடைந்து இருப்பாங்க. ஆனால் நான் சீட்டுக்காக வரவில்லை. எந்த சீட்டில் நான் நிற்பேன் என்று நினைத்தார்களோ அந்த தொகுதியில் இப்போது ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன். எனக்காக அல்ல இவருக்காக (தமிழச்சி தங்கபாண்டியனை கைகாட்டி). அதனால் தான் முதலில் சொன்னேன். இத்தகைனை கொடிகள் பறக்கிறது. அதுவெல்லாம் ஒரு கொடிக்காக. தேசியக்கொடிக்காக. தேசியக்கொடியின் அர்த்தத்தை மறந்துபோகக்கூடியவர்கள் இங்கு உள்ளனர். அதற்கு நீங்கள் இடம் கொடுக்க கூடாது. மேலும் அடுத்த முறை தேர்தல் வருமோ வராதோ என அறிஞர்கள் பயப்படுகின்றனர். அறிஞர்கள் பயப்பட்டால் மட்டும் போதும். நாம் அதனை செயல்படுத்த வேண்டும். உங்கள் விரல் அசைவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

ஜனநாயகத்தில் ஒருவரை அடிக்க முடியாது. ஆனால் கொள்கை ரீதியாக ஒருவரை திருப்பி அடிக்கலாம். அப்படி பாஜகவுக்கு அடி கொடுத்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். முக்கியமாக சர்வாதிகாரத்தை திருப்பி அடிக்கிறார். இதனால் தான் என்னை மாதிரி ஆட்கள் எல்லாம் இங்கு வந்து நிற்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.