தான் பிரச்சாரம் செய்யும்போது வாகனத்துடன் வந்து இடையூறு செய்வதாக கூறி, வண்டியை மறித்து செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக களமிறங்கியுள்ளார். கோவையில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அண்ணாமலை, தனது தொகுதியில் மட்டுமின்றி, பிற தொகுதிகளில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில், திருப்பூர் பல்லடம் பகுதியில் அண்ணாமலை நேற்று தனது பிரச்சார வாகனத்தில் நின்றபடி வாக்கு சேகரித்தார். அப்போது, தனியார் செய்தி தொலைக்காட்சி வாகனம், அண்ணாமலையின் பிரச்சார வேனுக்கு முன்பாக சென்றபடி, அண்ணாமலை பிரச்சார பயணத்தை ஒளிப்பதிவு செய்து வந்தது. பாஜகவினர், அண்ணாமலையின் பிரச்சார வாகனத்திற்கு வழிவிடுமாறு கூறியதாக தெரிகிறது. ஆனால், அண்ணாமலை பிரச்சாரத்தை கவர் செய்வதற்காக செய்தி வாகனம் முன்பாகவே சென்று கொண்டிருந்ததால், டக்கென ஓவர்டேக் செய்து செய்தி தொலைக்காட்சி வாகனத்தை வழிமறித்தார் அண்ணாமலை.
வேனில் இருந்து கீழே இறங்கி செய்தியாளர்களை நோக்கி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார் அண்ணாமலை. “என் தேர்தல் பிரச்சாரத்தை ஏன் டிஸ்டர்ப் பண்றீங்க? நான் மக்களை பார்க்க வந்திருக்கேன். மீடியாவை பார்க்க வரல. என்ன இடைஞ்சல் பண்ணிட்டு இருக்கீங்களா.. என் பிரச்சாரத்தின்போது உடன் வந்தால் ஒரு காருக்கு 8 ஆயிரம் ரூபாய் சேர்ப்பாங்க தேர்தல் ஆணையம். நீங்க ஏன் என் பிரச்சாரத்துக்கு உள்ள வர்றீங்க?” என ஆவேசமாகப் பேசினார். அதோடு, சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியின் மேலதிகாரிகளுக்கும் போன் செய்த அண்ணாமலை, “நான் பல்லடத்தில் இருக்கேன். உங்க நியூஸ் சேனல் ரிப்போர்ட்டர்ஸ் இங்கே ரொம்ப அட்டூழியம் பண்ணிட்டு இருக்காங்க. ரொம்ப ஓவரா போறாங்க. பிரச்சாரத்துக்கு பெரிய தொந்தரவா இருக்காங்க. போக்குவரத்து நெரிசலை உண்டாக்குறாங்க.. நான் அப்புறம் போலீஸ்ல கம்ப்ளெயின்ட் செய்ற மாதிரி ஆகிடும்” என மிரட்டும் தொனியில் பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் கோபமாகப் பேசிய அண்ணாமலை, “என்கிட்ட இந்த வேலை எல்லாம் வச்சுக்க கூடாது. 3 முறை வார்னிங் கொடுத்தேன்ல. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கணும். இந்த பழக்கம் எல்லாம் எங்ககிட்ட வச்சுக்காதீங்க. மக்கள் ஓட்டு போடுறாங்க.. நான் மக்களை பாக்குறேன். நீங்க உங்க டிவியில் போட்டு தான் அவங்க ஓட்டு போடணும்னு இல்ல. உங்களை யாரு வரச் சொன்னது? எல்லாம் ஒரு லிமிட் தான்” என ஆவேசமாகப் பேசினார். கிராமப்புறப் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது, செய்தி தொலைக்காட்சி வாகனத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விட்டதாக கூறி அண்ணாமலை கீழே இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.