விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிப்பு!

திமுக எம்எல்ஏ புகழேந்தி மரணமடைந்ததை அடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தமிழக சட்டசபை செயலகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையத்திற்கும் சட்டசபை செயலகம் அறிவிக்கும். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது நடத்துவது என்பது குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தெரிகிறது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் 2 ஆண்டுகள் இருக்கின்றன. இதனால் இந்த நாடாளுமன்றத் தேர்தலுடனேயே விக்கிரவாண்டிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது. அது எப்போது என்பது தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும். அதாவது தமிழகத்திற்கு முதல் கட்டமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால் ஏப்ரல் 19ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலை நடத்துவதற்கு இயலாத காரியம். ஏற்கெனவே அரசியல் கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்தில் பிஸியாக இருக்கிறார்கள். இந்த நிலையில் குறுகிய காலத்தில் இடைத்தேர்தலை அறிவிப்பது முடியாது. இதனால் மற்ற மாநிலங்களில் நடைபெறும் லோக்சபா தேர்தலுடன் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை நடத்த வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. எதுவாக இருந்தாலும் தேர்தல் ஆணையம்தான் முடிவை சொல்லும்.

விக்கிரவாண்டி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இதனால்தான் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தார். அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். இதைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வென்று எம்எல்ஏவானார். கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் 10 நாட்களுக்கு மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து கடந்த ஏப்ரல் 4ஆம் தேதிதான் அவர் சென்னையிலிருந்து விக்கிரவாண்டி திரும்பினார். இதைத் தொடர்ந்து அடுத்த நாளே அதாவது ஏப்ரல் 5 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருடைய உடல்நிலை மோசமாக இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து திமுக தொண்டர்கள் மருத்துவமனைக்கு குவிந்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் புகழேந்தி சிகிச்சை பலனின்றி அன்றைய தினமே உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உடலுக்கு அமைச்சர் பொன்முடி நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். விழுப்புரத்தில் திமுகவின் செல்வாக்கு அதிகரிக்க பாடுபட்டவர் புகழேந்தி.