மதுபான கொள்கை ஊழல் வழக்கு: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் பி.ஆர்.எஸ் கட்சியின் எம்எல்சி. கவிதாவுக்கு ஜாமீன் வழங்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

டெல்லி மதுபான கொள்கை ஊழலுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த மார்ச் 15-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. விசாரணைக்கு பிறகு அவரை ஏப்ரல் 9-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, கவிதா தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கும்படி சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார், தனது 16 வயது மகன் தேர்வுக்குத் தயாராகி வருவதால் அவருக்கு தனது ஆதரவு தேவைப்படுவதாக மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் பிஆர்எஸ் கட்சியின் எம்எல்சி கவிதாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.

அதோடு, இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கவிதாவின் ஜாமீன் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி வாதங்கள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.