ஒரு துரும்பு அளவுக்குக் கூட பிரதமர் மோடி தவறு செய்யவில்லை. பரிசுத்தமானவர். அன்பிற்கு இலக்கணம் மோடி தான் என்று ராமதாஸ் கூறினார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர், வேட்பாளர்கள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது.
பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், ஓபிஎஸ் அணி, ஐஜேகே, புதிய நீதிக் கட்சி, தமமுக, தேவநாதன் கட்சி ஆகியவை அங்கம் வகிக்கின்றன. கூட்டணியில் தருமபுரி, கடலூர் உள்பட பத்து இடங்களில் பாமக போட்டியிடுகிறது. வேட்பாளர்களுக்கு ஆதரவாக ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
விழுப்புரத்தில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ், “உலகில் பல வல்லரசு நாடுகளும், வல்லரசு தலைவர்களும் உள்ளனர். அந்த பெரிய பெரிய வல்லரசு நாடுகளில் தலைவர்கள் எல்லாம் ஒரு தலைவரைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். அவர்தான் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி. உலகத் தலைவர்களே கண்டு வியக்கும் அற்புதமான தலைவராக உள்ளார். மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக்க வேண்டும். ஒரு துரும்பு அளவுக்குக் கூட பிரதமர் மோடி தவறு செய்யவில்லை. பரிசுத்தமானவர். அன்பிற்கு இலக்கணம் மோடி தான். 400 மக்களவை உறுப்பினர்கள் பாஜகவின் சார்பில் வெற்றி பெறுவார்கள் என்று சொல்லி வருகிறார்கள். 401வது நபராக விழுப்புரம் பாமக வேட்பாளர் முரளி சங்கர் பிரதமரை தேர்ந்தெடுப்பார். அதற்கு முரளி சங்கருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.