இந்த தேர்தல் இரு சித்தாந்தங்களுக்கு இடையேயான யுத்தம்: ராகுல் காந்தி

இந்த தேர்தல் இரு சித்தாந்தங்களுக்கு இடையேயான யுத்தம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளிடையே பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்தும், எதிர்க்கட்சியினரை விமர்சித்தும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், மக்களவை தேர்தலானது இரு சித்தாந்தங்களுக்கு இடையே நடக்கும் யுத்தம் என்று ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அவர் பதிவிட்டிருப்பதாவது:-

இந்தியாவின் ஒற்றுமைக்காக காங்கிரஸும், மறுபக்கம் மக்களை எப்போதும் பிளவுபடுத்த நினைப்பவர்களும் இருக்கின்றனர். நாட்டை பிளவுபடுத்துபவர்களின் பக்கம் நின்றவர்கள் யார்? நாட்டின் சுதந்திரத்திற்காகவும், ஒற்றுமைக்காகவும் நிற்பவர்களுடன் கைகோர்த்தது யார்? என்பது வரலாற்றில் பதிவு செய்யப்படும்.

ஒத்துழையாமை இயக்கத்தின் போது பிரிட்டிஷ் அரசுடன் நின்றவர்கள் யார்? சிறை சென்றவர்களுக்கு ஆதரவாக நின்றவர்கள் யார்? என்பது நமக்கு தெரியும். அரசியலுக்காக பொய்களை அள்ளி வீசுவதால் வரலாற்றை மாற்றிவிட முடியாது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.