டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் திடீர் ராஜினாமா!

டெல்லி அரசில் சமூக நலத் துறை அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதோடு ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், இது கெஜ்ரிவாலுக்கு மேலும் நெருக்கடியை தருவதாக அமைந்துள்ளது.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் திஹார் சிறையில் உள்ள நிலையில், தற்போது டெல்லி அரசியலில் ஒரு புதுவித திருப்பம் நிகழ்ந்துள்ளது. டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதோடு, ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “ஆம் ஆத்மி கட்சி ஊழலை எதிர்த்துப் போராட தொடங்கப்பட்டது. ஆனால், இன்று அந்தக் கட்சி ஊழலில் சிக்கித் தவிக்கிறது. அமைச்சர் பதவியில் பணியாற்றுவது எனக்கு கடினமாகிவிட்டது. ஊழல் என்ற பெயருடன் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை. அதனால், அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளேன். ‘அரசியல் மாறினால் நாடு மாறும்’ என பேசியவர் கெஜ்ரிவால். இன்று அரசியல் மாறவில்லை, அரசியல்வாதி மாறிவிட்டார். இந்த சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக நான் அமைச்சரானேன். பட்டியலின மக்கள் பிரதிநிதித்துவத்தை தடுத்து நிறுத்தும் கட்சியில் நான் நீடிக்க விரும்பவில்லை” என்றார்.

பொலிட்டிக்கல் சயின்ஸில் முதுகலை பட்டம் பெற்ற ஆனந்த், 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மத்திய டெல்லியில் உள்ள பட்டேல் நகரில் வெற்றி பெற்றார். கடந்த 2023 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், பணமோசடி வழக்கில் ஆனந்தின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் (ED) சோதனை நடத்தினர். அப்போது ஆனந்த் தொடர்புடைய 13 இடங்களில் அவரது ஊழியர்களிடம் இருந்து முக்கிய ஆதாரங்கள் மீட்கப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகியுள்ளார்.